சென்னை: தமிழ்நாட்டில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு இடங்களில் குடியிருக்கும் ஏறக்குறைய 86,000 பேருக்கு நிலம் வழங்கப்பட உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை ( ஏப்ரல் 27) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சென்னையை சுற்றியுள்ள அந்த நான்கு மாவட்ட மக்களுக்கு பட்டா வழங்கக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தமிழகத்தில் பல ஆண்டுகாலமாகப் புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.
சென்னையில் மட்டும் ஆட்சேபகரமற்ற புறம்போக்கு பகுதிகளில் 29,187 பேர், இதர மாவட்டங்களில் 57,084 பேர் என மொத்தம் 86,271 பேருக்கு பட்டா வழங்கப்படும் என்று கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதும் முடிவு செய்யப்பட்டது. மேலும் 6 மாதங்களில் பட்டா வழங்க வருவாய்த்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் 86,000 பேருக்கு பட்டா வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும் நில ஒதுக்கீட்டு வரம்புகளையும் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.