கடந்த ஆண்டு 65,000 சாலை விபத்துகளில் 16,000 பேர் உயிரிழப்பு

1 mins read
5ce38f3d-a4a2-4e31-ad13-174f32227658
தமிழகத்தில் இம்மாதம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அடுத்தடுத்து ‘சாலை பாதுகாப்பு வாரம்’ கொண்டாடப்படுகிறது. - சித்திரிப்புப்படம்: தெலுங்கானா டுடே

சென்னை: தமிழகத்தில் கடந்த ஆண்டு நாள்தோறும் சராசரியாக 195 விபத்துகளும் 50 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் கிரண் குராலா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மாநிலம் முழுவதும் 65,000 சாலை விபத்துகள் பதிவாகி உள்ளதாகவும் 16,553 பேர் மாண்டு போனதாகவும் அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இம்மாதம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அடுத்தடுத்து ‘சாலைப் பாதுகாப்பு வாரம்’ கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், மாவட்ட அளவில் விபத்துகளின் எண்ணிக்கையில் ஆக அதிகமாக, 3,777 விபத்துகளுடன் சென்னை முதல் இடத்தில் உள்ளது. செங்கல்பட்டில் 3,509, கோவையில் 3,406 விபத்துகள் பதிவாகி உள்ளன.

உயிரிழப்புகளைப் பொறுத்தவரை, கோவையில் ஆக அதிகமாக 895 பேர் பலியாகிவிட்டனர். திருப்பூரில் 774, செங்கல்பட்டு, மதுரையில் 773 பேர்‌ மாண்டுபோயினர்.

கடந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை சராசரியாக மாதந்தோறும் 5,000 முதல் 6,000 வரை விபத்துகள் பதிவாகி உள்ளன.

கடந்த 2024ல் 67,526 விபத்துகளில் 18,449 பேர் உயிரிழந்துவிட்டனர்.

தற்போது விபத்து, மாண்டோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ஆணையர் கிரண் குராலா தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்