சென்னை: சென்னையில் மூன்றாவது முறையாக அனைத்துலகப் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
நந்தம்பாக்கம் வணிக மையத்தில் ஜனவரி 16 வியாழக்கிழமை முதல் ஜனவரி 18 சனிக்கிழமைவரை மூன்று நாள்கள் நடைபெறும் இந்தப் புத்தகத் திருவிழாவை மாநிலப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசனும் தொடங்கி வைத்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், “தமிழ் நூல்களை மொழிபெயர்த்து உலக அளவில் கொண்டுசெல்ல 35 இலக்கிய வல்லுநர்களைப் பணியமர்த்தியுள்ளோம். இதுவரை 66 தமிழ் நூல்கள் 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் 30 நூல்களை முதல்வர் ஸ்டாலின் வரும் சனிக்கிழமையன்று அனைத்துலகப் புத்தகத் திருவிழாவில் வெளியிடவுள்ளார்,” என்றார்.
அமெரிக்கா, பிரான்ஸ், மலேசியா உள்ளிட்ட 65 நாடுகளைச் சேர்ந்த நூல் பதிப்பாளர்கள் இந்நிகழ்வில் பங்குகொள்கின்றனர்.
புத்தகத் திருவிழா நடைபெறும் மூன்று நாள்களும் நூல் வெளியீடுகள், கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், சிறப்புச் சொற்பொழிவுகள் எனப் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாண்டுக் கண்காட்சிக்குத் தமிழக அரசு ரூ.6 கோடி செலவிட்டுள்ளதாகக் கூறப்பட்டது. குழந்தைகளுக்கான மூன்று அரங்குகளுடன் 78 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த 2023ஆம் ஆண்டு முதன்முறையாக நடத்தப்பட்ட அனைத்துலகப் புத்தகக் கண்காட்சியில் 24 நாடுகளைச் சேர்ந்த பதிப்பாளர்களும் 2024ஆம் ஆண்டில் 40 நாடுகளைச் சேர்ந்த பதிப்பாளர்களும் பங்கேற்றனர். கடந்த ஆண்டு நடந்த கண்காட்சியின்போது 750 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.