தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உடல்நலம் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள் பாதுகாப்பாக பிரசவிக்க புதிய திட்டம் தொடக்கம்

2 mins read
e332e10c-2b89-4502-ad88-6cfbf3444163
இந்த நவம்பர் மாதத்தில் மட்டும் பிரசவத்துக்காக காத்திருக்கும் 76,473 கர்ப்பிணிகளில் 29% பேருக்கு உடல்நலக் கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: உடல்நலப் பிரச்சினைகள், இணை நோய்களுடன் உள்ள கர்ப்பிணிகள் தங்களது பிரசவத்தை பாதுகாப்பாக மேற்கொள்வதை உறுதிசெய்ய, புதிய திட்டத்தை தமிழகப் பொது சுகாதாரத் துறை தொடங்கியுள்ளது.

“இந்த நவம்பர் மாதத்தில் மட்டும் பிரசவத்துக்காக காத்திருக்கும் 76,473 கர்ப்பிணிகளில் 29% பேருக்கு உடல்நலக் கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

“இவர்கள் அருகிலுள்ள அவசரகால மகப்பேறு, குழந்தைகள் நல ‘சீமாங்க்’ மருத்துவ மையங்கள் அல்லது தாங்கள் விரும்பும் தனியார் மருத்துவமனைகளில் தங்களை முன்கூட்டியே அனுமதித்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என்று தமிழகப் பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணிகளுக்கான புதிய திட்டம் குறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறுகையில், “தமிழகத்தில் மகப்பேறு உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

“தாய்-சேயின் உயிரைக் காக்க உயர் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. அதன் தொடர்ச்சியாக சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

“சில கர்ப்பிணிகள் பிரசவ காலத்தில் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். பிரசவத்துக்கு பிந்தைய அதிக ரத்தப்போக்கு, உயர் ரத்த அழுத்த பாதிப்பு, ரத்தத்தில் கிருமித் தொற்று, இதயப் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் காரணமாக பிரசவகால உயிரிழப்புகள் நேரிடுகின்றன. இதைத் தடுக்க இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

‘பிக்மி’ தளத்தில் பதிவேற்றம்

“தமிழகம் முழுவதும் உள்ள கர்ப்பிணிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களில் இணைநோய் உள்ளவர்கள், பிரசவகால உடல்நலப் பாதிப்புகள், சர்க்கரை நோய்க்கு ஆளானவர்கள் கண்டறியப்படுவார்கள். அவர்களைப் பற்றிய விவரங்கள் கர்ப்பிணிகளுக்கான ‘பிக்மி’ (PICME) தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

“பின்னர், ‘சீமாங்க்’ மருத்துவ மையங்களுக்கு இந்த தகவல் அளிக்கப்படும். அங்கு அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்படும்.

“இதற்காக, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவக் கட்டமைப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் உள்ள 129 சீமாங்க் மையங்களில் 24 மணி நேரமும் மகப்பேறு மருத்துவர்கள், அவசரகால மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளனர்.

“இதன்மூலம், உடல்நலப் பிரச்சினைகளுடன் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பான பிரசவம் உறுதி செய்யப்படும்,” என்று தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்