சென்னை: பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிட்ட அரசின் முடிவுக்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
சென்னையைச் சேர்ந்த மின் பொறியாளரும் பதிப்பாளருமான கௌதமன் தாக்கல் செய்துள்ள மனுவில், ஆண்டுக்கு மூன்று கோடிப் பயணிகள் வந்துசெல்லும் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிலவும் இடநெருக்கடியைத் தீர்க்க ரூ.27,000 கோடி செலவில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“பன்னூர், திருப்போரூர், படாளம் உள்ளிட்ட இடங்களை ஆய்வுசெய்த பிறகே பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது. 2,325 ஹெக்டேர் பரப்பளவில் திட்டத்தைச் செயல்படுத்த 2023ஆம் ஆண்டில் 1,527 ஹெக்டர் தனியார் நிலங்களைக் கையகப்படுத்த அனுமதி வழங்கப்பட்டு, 798 ஹெக்டர் அரசு நிலம் வகை மாற்றம் செய்யப்பட்டது. 1,700 ஏக்கர் நிலத்தில் 48 விழுக்காடு நிலங்களைக் கையகப்படுத்த ரூ.680 கோடி அரசு நிதி செலவிடப்பட்டுள்ளது,” எனத் திரு கௌதமன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், புதிதாகப் பொறுப்பேற்ற தவெக அரசு, விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக்கூறி, கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி சட்டமன்றத்தில் 110வது விதியின்கீழ் இத்திட்டத்தைக் கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்ததைத் திரு கௌதமன் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொழில்நுட்பப் புள்ளிவிவரங்கள், நிபுணர் குழு அறிக்கைகள், பொருளியல் ஆய்வுகள் ஏதுமின்றி பரந்தூர் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக மனுதாரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
“எனவே, 110வது விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பைச் செயல்படுத்தத் தடை விதிக்க வேண்டும், கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் உரிமையாளர்களிடம் வழங்கத் தடை விதிக்க வேண்டும். இத்திட்டத்தைக் கைவிட்ட முடிவு அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என அறிவித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்,” என திரு கௌதமன் மனுவில் கோரப்பட்டுள்ளது.
