‘வெற்றிப் பயணம்’ திட்டத்திற்குத் தடை கோரி வழக்கு

‘வெற்றிப் பயணம்’ திட்டத்திற்குத் தடை கோரி வழக்கு

படம்: மாலை மலர்

05 Oct 2026 - 1:02 pm

1 mins read

சென்னை: தமிழக அரசு சார்பில் மகளிர்க்காக அண்மையில் தொடங்கப்பட்ட 'வெற்றிப் பயணம்' இலவசப் பேருந்து பயணத் திட்டத்தை அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

ஈரோட்டைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர் கலாமணி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், முந்தைய ஆட்சியில் 'விடியல் பயணம்' என்றிருந்த திட்டம், தற்போது 'வெற்றிப் பயணம்' என விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்வதால், தனியார் பேருந்துகளில் பெண் பயணிகளின் வருகை கடுமையாகக் குறைந்துள்ளதாகவும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் பெரும் நிதி இழப்பைச் சந்தித்துத் தொழிலைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இத்திட்டத்திற்காக அரசு ஆண்டுக்கு ரூ.6,000 கோடி மானியம் ஒதுக்கும் நிலையில், தனியார் பேருந்துகளுக்கும் இத்தொகையை வழங்கி திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக கலாமணி குறிப்பிட்டுள்ளார்.

சட்டமன்ற அறிவிப்பின்படி செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கு முறையான அரசாணை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் பெண் பயணிகளிடம் மட்டும் கட்டணம் வசூலிக்காமல் இருப்பது அரசியலமைப்பின் சம உரிமைக்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்