சென்னை: திருவல்லிக்கேணி, ஐஸ் ஹவுஸ் பகுதியில் டாக்டர் நடேசன் சாலையில் உள்ள தங்களது மாளிகையை மார்க்சிஸ்ட் கட்சிக்கு எழுதிக்கொடுத்துள்ளார் வழக்கறிஞர் ஒருவர். இதற்கு அவருடைய மனைவியும் முழு மனதாகக் கையெழுத்துப்போட்டு பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் இ.கோகுலகிருஷ்ணன் என்பவரும் அவருடைய மனைவி ஜெயந்தியும் சேர்ந்து தங்களது பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்துடன் கூடிய வீட்டை, மத்திய சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அன்பளிப்பாகக் கொடுக்க விரும்புவதாக தங்கள் விருப்பத்தை மாநிலக் கட்சிச் செயலாளர் பெ.சண்முகத்திடம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை பிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தங்களது வீட்டை முறைப்படி பத்திரப் பதிவு செய்து, சொத்து தொடர்பான ஆவணங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்திடம் வழக்கறிஞர் கோகுலகிருஷ்ணன் ஒப்படைத்தார்.
குடும்பச் சொத்தை கட்சிப் பணிக்காக வழங்கிய தம்பதியருக்கு பெ.சண்முகம் நன்றியும், பாராட்டும் தெரிவித்தார். மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, சால்வை அணிவித்து கௌரவித்தார்.
வழக்கறிஞர் கோகுலகிருஷ்ணனும் அவரது மனைவி ஜி.ஜெயந்தி ஆகிய இருவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளாலும், ஏழை எளிய மக்களுக்கான களப்பணிகளாலும் ஈர்க்கப்பட்டவர்கள்.
தங்களின் வாழ்நாள் உழைப்பில் சேர்த்த சொத்து, ஒடுக்கப்பட்ட உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமைக்கான போராட்டங்களுக்கும், மக்கள் நலப் பணிகளுக்கும் பயன்பட வேண்டும் என்ற உன்னத நோக்கில் அவர்கள் தங்கள் வீட்டைக் கொடையளித்துள்ளனர்.


