தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாம்சுங் ஊழியர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்திய தலைவர்கள் கைது

2 mins read
43015843-b771-482d-8e13-3c68484d6bbc
சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர்கள், கட்சித் தலைவர்கள், தொழிற்சங்கப் பிரமுகர்கள். - படம்: ஊடகம்

சென்னை: சாம்சுங் நிறுவனத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளன.

மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாட்டையும் அவர்கள் விமர்சித்துள்ளனர்.

சாம்சுங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநிலச் செயலாளர்களான இரா.முத்தரசன், கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தொழிற்சங்கம் தொடங்க அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஒரு மாதமாக சாம்சுங் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

1,500 பேர் இதில் பங்கேற்றுள்ள நிலையில், சனிக்கிழமையன்று தொழிலாளர்களுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டுபேசிய கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர்கள், காவல்துறையும் தமிழக அரசும் போராட்டத்தை ஒடுக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டினர்.

தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

“சாம்சுங் நிர்வாகத்தின் கடைக்கண் பார்வையில்கூட கோபம் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அச்சத்தில் தமிழக அரசும் காவல்துறையும் நமது ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்துள்ளது. இப்பிரச்சினையில் திமுக அரசு, சாம்சுங் நிர்வாகத்துக்கு ஆதரவாக இருக்கிறது. தொழிலாளி உரிமையை அளிக்க திமுக அரசு மறுத்ததை எதிர்த்து தமிழகமே போராடுகிறது என்ற நிலைக்கு முதல்வர் இடமளிக்கக் கூடாது,” என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்.

“தொழிலாளர்கள் நலன்களை பாதுகாக்க அரசுகள் இருந்த மாநிலத்தில், தொழிற்சங்கம் வைக்கக் கூடாது என நிறுவனம் செய்யும் அடாவடித்தனத்துக்கு தொழிலாளர் நலத்துறை ஆதரவளிப்பது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல,” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.

காவல்துறையினர் அனுமதியை மீறி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்