சென்னை: அடுத்த தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பணிகளை மேற்கொள்ளச் சென்னையிலிருந்து கிளம்புமாறு தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தமது அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
“அமைச்சர்கள் எல்லாரும் சென்னையைவிட்டுக் கிளம்புங்கள். அவரவர் மாவட்டத்தில் மக்களை சந்தித்துப் பேசி தேர்தல் வேலையை துவங்குங்கள். வரும் சட்டசபை தேர்தலில், வெற்றி வாய்ப்பு இருப்பவர்களே வேட்பாளர்களாக நிறுத்தப்படுவர்,” என்று திரு ஸ்டாலின் கூறியதாக தினமலர் ஊடகம் தெரிவித்துள்ளது.
சென்னை அறிவாலயத்தில் சனிக்கிழமை (மே 3) நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அவர் பேசினார்.
“திமுகவின் பலமே, அதன் குக்கிராமங்கள் வரை இருக்கும் கட்டுமானம்தான். இத்தகைய நிர்வாகக் கட்டமைப்பு, எந்தக் கட்சிக்கும் கிடையாது. அந்தக் கட்டமைப்பைக் காலந்தோறும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறோம், புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும், அப்போது தான் வெற்றி கிடைக்கும்,” என்றார் அவர்.
“தமிழகத்தில் எப்படியாவது காலுான்றி விடவேண்டும் என பாஜக நினைக்கிறது. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளைப் பயன்படுத்தி மிரட்டி, அனைத்து விதமான அச்சுறுத்தல்களையும் செய்து அதிமுகவை பாஜக அடக்கிவிட்டது.
“அதிமுக பொதுச் செயலர் பழனிசாமிக்கும் வேறு வழியில்லை. பாஜக கூட்டணியை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவர் தலைமைக்கே சிக்கல் வரும் என்று பயப்படுகிறார். அதனால், பாஜக கூட்டணியை ஏற்றுவிட்டார்,” என்று திரு ஸ்டாலின் சாடினார்.
“திமுக. எல்லா காலகட்டங்களிலும் இதுபோன்ற சோதனைகளை, நெருக்கடிகளை எதிர்கொண்ட இயக்கம்தான்,” என்று நம்பிக்கையூட்டும் வண்ணம் பேசினார்.
“சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்டது. அமைச்சர்கள் இனி சென்னையில் இருப்பதைக் குறைத்துக் கொண்டு அவரவர் மாவட்டங்களுக்கு சென்று அதிக நாள்களைச் செலவிடுங்கள், தேர்தல் வேலையை துவங்குங்கள்,” என்று திரு ஸ்டாலின் உத்தரவிட்டார்.

