தமிழக சட்டமன்ற பிரசாரக் களம் கடும் வெயிலுக்கு நிகராக சூடாகி உள்ளது.
கட்சிகளின் குவியல்களாக இரு பெரும் கூட்டணிகள். துணையின்றி தனியாக இரண்டு கட்சிகள் - வாக்காளர்கள் முடிவுசெய்ய இப்படி நான்கு தெரிவுகள். வழக்கமாக, சட்டமன்ற, மக்களவைத் தேர்தல்களில் தனித்துக் களம் காணும் தனித்துவம் பெற்ற நாம் தமிழர் கட்சிக்குப் போட்டியாக இந்தக் களத்தில் தமிழக வெற்றிக் கழகம்.
மாற்றமா? முன்னேற்றமா?
நான்கு முனைத் தேர்தலில் இந்த இரு அம்சங்களின் அடிப்படையிலேயே வாக்குகள் விழும் சூழல். முன்னேற்றத்தை ஆளும்கட்சியும் மாற்றத்தை மற்ற கட்சிகளும் உரக்க முழங்குகின்றன. இரு பெரும் கழகங்களும் இதுவரை ஆண்ட லட்சணத்தைப் பார்த்துவிட்ட மக்களில் பலர், நிலைமை மாறுவதும் நல்லது என்கின்றனர்.
அந்த வாய்ப்பைப் பயன்படுத்த நாதகவும் தவெகவும் துடிக்கின்றன.
இந்தத் தேர்தலில் இளையர்களின் தேர்வாக இந்த இரு கட்சிகளே முன்னிலையில் உள்ளதாகவும் நடுநிலையாளர்களும் இளசுகளின் விருப்பத்தை ஆதரிக்கின்றனர் என்றும் ஊடகத்தினர் கூறுகின்றனர்.
அதேநேரம் தமிழகத்தில் ஆழமாக விதைக்கப்பட்ட கட்சி நாதக என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
கர்ஜிக்கும் குரல், ஆங்கிலம் கலக்காத தமிழ்ப் பேச்சு, கொட்டும் மழையிலும் பிரசாரத்தை விட்டுவிடாத குணம், சமூக ஊடகங்களில் பிரமிக்க வைக்கும் செயல்பாடு, தனித்தே நிற்பது, சரிக்குச் சரி பெண்கள், எதிர்மறை விமர்சனங்களைச் சமாளிக்கும் ஆற்றல் - இவற்றால் மற்ற கட்சிகளிடமிருந்து நாதக வேறுபடுகிறது.
தொடர்புடைய செய்திகள்
தேர்தல் களம் தயாராகும் முன்னரே, இவர்கள்தான் வேட்பாளர்கள், இதுதான் சின்னம் என அறிவித்து, முன்கூட்டியே பிரசாரத்தைத் தொடங்கியதால் பட்டி தொட்டிகளில் எல்லாம் ‘விவசாயி’யைக் கொண்டு சேர்க்க முடிகிறது. பல வேட்பாளர்கள் ஆறு மாதங்களுக்கு மேலாகவே தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.
சீமான் மட்டும் 25 நாள்களில் ஆங்காங்கே நிறுத்தி, நிறுத்தி 8,000க்கும் அதிகமான கிலோமீட்டர் சென்று மக்கள் மத்தியில் பிரசாரம் செய்துள்ளார். பிரசாரத்தில் அவர் எடுத்துரைக்கும் அம்சங்கள் நடுத்தர மக்களைப் பெரிதும் கவர்ந்து வருகின்றன. “கல்வி, மருத்துவம், குடிநீர் ஆகிய மூன்றை மட்டுமே நாதக அரசாங்கம் இலவசமாக வழங்கும். பட்ஜெட்டில் பெரும் பற்றாக்குறை இருக்கும்போது பொருள்களை எப்படி இலவசமாகத் தரமுடியும். அந்த இலவசங்களுக்கு ஆகும் செலவு, பின்னர் வரி என்ற உருவத்தில் மக்கள் தலைமீதே வந்து விழும்,” என்று அவர் கூறுவதைப் பலரும் நியாயமாகக் கருதுகிறார்கள்.
தலைவர்கள் அதிகமில்லாத கட்சியாக இருந்தபோதிலும் நாதகவின் வலிமையைக் குறைத்து மதிப்பிட்டுவிடலாகாது. ஈராண்டுகளுக்கு முன்னர் ஆறு மக்களவைத் தொகுதிகளில் பாஜக கூட்டணியைப் பின்னுக்குத் தள்ளி மூன்றாம் இடத்தைப் பிடித்து சிலிர்த்து எழுந்தது நாதக. மேலும், 12 தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் அக்கட்சிக்குக் கிடைத்தன. சீமானுக்கு செல்வாக்கு உள்ள பகுதிகள் திருச்சி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி என விரிவடைந்து வருகின்றன.
“நாதக, தவெகவுக்கு விழும் வாக்குகள் பெரிய கட்சிகளின் வெற்றி வாய்ப்பைப் பறிக்கும். அதேவேளை இவ்விரு கட்சிகளுக்கும் அதிக வாக்குகள் கிடைக்கும் என்பதே இப்போதைய கள நிலவரம். விஜய் சட்டமன்றத்திற்குள் அடியெடுத்து வைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமுள்ள நிலையில், இப்போதுகூட சீமானை ஜெயிக்க வைக்காமல் விட்டுவிடக்கூடாது என்னும் வேகத்தில் நாதகவினர் தீவிரக் களப்பணி ஆற்றி வருகிறார்கள். அதனால், அவர் போட்டியிடும் காரைக்குடியில் கிராமந்தோறும் ‘விவசாயி’க்கு வாக்குவேட்டையாடி வருகின்றன சில குழுக்கள். கடைசி ஒருசில நாள்கள் சீமானும் தமது தொகுதியில் மட்டும் கவனம்செலுத்த உள்ளார்,” என்கிறார் நாதக பேச்சாளர் ஒருவர்.
2021 தேர்தலில் 48,597 வாக்குகளுடன் மூன்றாம் இடம்பிடித்த சீமான், இம்முறை முதலிடத்துக்கு வரவேண்டும்; சட்டமன்றத்தில் அவரது சிம்மக்குரல் ஒலிக்க வேண்டும் என்பதே நாதக தொண்டர்களின் கலையாத கனவாக உள்ளது. -திருநா

