சென்னை: டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதை எதிர்த்து சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வரும் டிசம்பர் 9ஆம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு முன்னதாக அறிவித்து இருந்தார்.
பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் திங்கட்கிழமை (டிசம்பர் 2) அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் டிசம்பர் 9, 10 ஆகிய இரு நாள்களில் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சட்டப்பேரவையில் மதுரை டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராகத் தனித்தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சி நிரலில், “மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்திடவும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தும் அரசின் தனித் தீர்மானம் கொண்டு வரப்படும்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.