தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விழிப்புணர்வு வாசகத்தில் எழுத்துப் பிழை: முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய சிறுமி

2 mins read
b727c25b-2164-42d5-9875-62c306eefc8b
எழுத்துப் பிழையைக் கண்டுபிடித்த சிறுமி. - படம்: ஊடகம்

கோவை: தியேட்டரில் ஒளிபரப்பான விழிப்புணர்வு வாசகத்தில் எழுத்துப்பிழை. பிழையை மாற்றக் கோரி முதலமைச்சருக்கு கடிதம்.

கோவை பீளமேடு அடுத்த காந்திமாநகர் ஹட்கோ காலனியை சேர்ந்தவர் பழனிச்சாமி. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கணக்கு உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி கிருத்திகா. இந்த தம்பதிக்கு பிரணவிகா (வயது10). இவர் அந்தப் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த 6ஆம் தேதி பழனிச்சாமி தனது குடும்பத்தினருடன் கோவையில் உள்ள பிரபல கடைத்தொகுதியில் படம் பார்க்கச் சென்றார்.

தியேட்டரில் படம் தொடங்குவதற்கு முன்பு போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு வாசகம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அதில், ‘புகைப்பிடித்தால் புற்றுநோய் உருவாகும் மற்றும் உயிரைக் கொள்ளும்’ என்ற வாசகம் வந்தது.

அதைப் பார்த்த சிறுமி, கொல்லும் என்பதற்கு பதிலாக கொள்ளும் என தவறாக இருப்பதாக சிறுமி தனது தந்தையிடம் கூறி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அந்த வாசகம் எழுத்துப் பிழையுடன் வருவதால் இதனைப் பார்க்கும் பல லட்சம் மக்களும், குழந்தைகளும் எழுத்துப் பிழையுடனே அதனை எழுத வாய்ப்புள்ளதாக கருதிய சிறுமி, தனது தந்தையுடன் சென்று திரையரங்கு மேலாளரிடம் இதுகுறித்து முறையிட்டுள்ளனர்.

அதற்கு அவர், இந்தப் படத்தின் காப்பி மும்பையில் இருந்து வந்துள்ளது. அதனை தங்களால் மாற்ற இயலாது என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்த மாணவி இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் தியேட்டரில் ஒளிபரப்பான விழிப்புணர்வு வாசகத்தில் உள்ள எழுத்துப் பிழையை சுட்டிக்காட்டியும் அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் கடிதம் எழுதி அனுப்பினார்.

இதுகுறித்து சிறுமியின் தந்தை பழனிச்சாமி கூறும்போது, “தமிழை ஊக்குவிக்க தமிழக முதலமைச்சர் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். எழுத்துப் பிழையை உடனடியாக மாற்றுவார்கள். மேலும் தன்னுடைய மகள் கொரோனா காலத்திலும் மழை வெள்ள பாதிப்புகளுக்கும் தான் சேர்த்து வைத்திருந்த தொகையைத் தமிழக அரசுக்கும் வழங்கியுள்ளார்,” என்று அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்