திருவள்ளூர்: தமிழ்நாட்டில் நூறு இடங்களில் பூங்காவுடன் கூடிய நூலகத்தை அமைக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று மாநிலப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நவீன வசதிகளுடன் ரூ.75 லட்சம் (S$118,170) செலவில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 18) அமைச்சர் மகேஸ் திறந்து வைத்தார். அந்நூலகத்தில் ஏறக்குறைய 3,000 நூல்கள் உள்ளன.
மாற்றுத்திறனாளிகளுக்கான ‘கேட்பொலி நூலகம்’, பொதுமக்கள் புத்தகம் நன்கொடை அளிக்க ‘நூல் நன்கொடைப் பெட்டி’ போன்ற வசதிகளுடன் அந்நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகைதரும் பொதுமக்கள் காத்திருப்பு நேரங்களில் அந்நூலகத்திற்குச் சென்று வாசிக்கலாம்.
அந்நிகழ்ச்சியில் பேசிய திரு மகேஸ், “பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் இதுபோன்ற சிறு நூலகங்களை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. அவ்வகையில், தமிழ்நாட்டில் நூறு இடங்களில் பூங்காவுடன் அமைந்த நூலகங்கள் அமைக்கப்படவுள்ளன. அவற்றுள் முதல் நூலகம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது,” என்றார்.
அந்நூலகத்தில் ஒரே நேரத்தில் 50 பேரும், நூலகப் பூங்காவில் 50 பேரும் அமர்ந்து நூல்களை வாசிக்கலாம் எனக் கூறப்பட்டது.
“இதுபோன்ற நூலகங்களால் எல்லாத் தரப்பு மக்களும் நூல்களையும் நாளிதழ்களையும் வாசிக்க முடியும். இதன்மூலம் வாசிப்புப் பழக்கம் உருவாகும்,” என்றார் அமைச்சர் மகேஸ்.
சென்னையில் மட்டுமின்றி எல்லா மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழாவை அரசு நடத்தி வருவதாகவும் அவர் சொன்னார்.
நாள்தோறும் ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்கள் நண்பகல் வேளையில் 20 நிமிடங்கள் நூலகத்திற்குச் சென்று ஒரு புத்தகத்தை வாசிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அமைச்சர், தமிழகத்தில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

