கோவை: 16 வயது பள்ளி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய எழுவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
அவர்களில் மூன்று குற்றவாளிகளுக்கு, சாகும் வரை சிறைத் தண்டனையும் இதர நால்வருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவையைச் சேர்ந்த அந்த பிளஸ்-1 மாணவி ஒருவர் (16 வயது) கடந்த 2019 நவம்பர் 26ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் தமது 19 வயது நண்பருடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
வழியில் உள்ள கருப்பராயன் கோயில் அருகே சென்றபோது, இருசக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர் அந்த இருவரையும் வழிமறித்தனர்.
பின்னர் அவர்களை வலுக்கட்டாயமாக தங்களது வாகனங்களில் ஏற்றிக் கொண்டு, ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதிக்குச் சென்றனர். வேறொருவரும் அந்த இடத்தில் இருந்துள்ளார்.
ஏழு பேரும் சேர்ந்து மாணவியின் நண்பரை சரமாரியாகத் தாக்கிவிட்டு, அங்கிருந்து விரட்டினர்.
பின்னர் ஏழு பேரும் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். மாணவியை கைப்பேசியில் புகைப்படமும் எடுத்தனர். நடந்த சம்பவம் குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி, மாணவியை அங்கிருந்து அனுப்பினர்.
அழுதுகொண்டே வீட்டுக்குச் சென்ற மாணவி, தமக்கு நேர்ந்த கொடுமை குறித்து மறுநாள் பெற்றோரிடம் கூறினார். அதிர்ச்சியடைந்த அவர்கள், தங்கள் மகளுடன் கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மேற்குப் பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
தொடர்புடைய செய்திகள்
போக்சோ, கடத்தல், கொலை மிரட்டல், சட்டவிரோதமாக அடைத்து வைத்தல், காயப்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் காவல் ஆய்வாளர் பிரபாதேவி தலைமையிலான காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
அதில், கோவை சீரநாயக்கன்பாளையம் மணிகண்டன் (30), ராகுல் (21), பிரகாஷ் (22), கார்த்திகேயன் (28), வடவள்ளி கார்த்தி (25), நாராயணமூர்த்தி (30), ஆட்டோ மணிகண்டன் என்ற மணிகண்டன் (30) ஆகிய ஏழு பேரும் மாணவியைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட அவர்கள் அனைவரும் விசாரணைக்குப் பிறகு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.
விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி பகவதியம்மாள் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தீர்ப்பு வழங்கினார்.
“வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் முதல் மூன்று குற்றவாளிகளான மணிகண்டன், கார்த்தி, ஆட்டோ மணிகண்டனுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும் தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது.
“ராகுல், பிரகாஷ், நாராயணமூர்த்தி, கார்த்திகேயன் ஆகிய நால்வருக்கும் ஆயுள் தண்டனையும் தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும்,” என்று நீதிபதி உத்தரவிட்டார்.

