திருவள்ளூர்: திருவள்ளூர் அருகில் உள்ள பட்டாபிராமில் தேவாலயத்திற்குள் ஊழியரைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வள்ளலார் நகரில் உள்ள அந்தத் தேவாலயத்தின் ஊழியரான 63 வயது ஈனோஸ், உயிரிழந்தோரின் சடலங்கள் அடக்கம் செய்யும் பணியைச் செய்து வந்தார்.
இந்நிலையில், சடலத்தை அடக்கம் செய்ய அதிகப் பணம் கேட்டதால் அதே பகுதியைச் சேர்ந்த மோசஸ் என்பவருடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில், 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் தேதியன்று தேவாலயத்தில் இருந்த ஈனோஸ் என்பவரை முன்விரோதம் காரணமாக மோசஸ் என்பவர் கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றார்.
ஆனால், சம்பவ இடத்திலேயே பலத்த காயமடைந்த நிலையில் ஈனோஸ் உயிரிழந்தார். இது குறித்து ஈனோசின் மைத்துனர் மார்ட்டின், பட்டாபிராம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் கால்துறையினர் வழக்குப்பதிவு செய்து மோசஸைக் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு இறுதியாக செவ்வாய்கிழமையன்று (பிப்ரவரி 2) நீதிபதி ஜூலியட் புஷ்பா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் நிருபிக்கப்பட்டதால் மோசஸிற்கு ஆயுள் தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

