சென்னை: உதட்டுச்சாயம் போட்டுக்கொண்டு பணிக்கு வந்ததால் சென்னை மாநகர மேயரின் தலைமை ஏவலாளாக இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மேயர் பிரியாவின் தலைமை ஏவலாளாக இருந்தவர் 50 வயது மாதவி. முக்கிய அரசியல், மக்கள்நல நிகழ்ச்சிகளில் மேயர் பிரியா கலந்துகொள்ளும்போது அவர் பயன்படுத்தும் அதே உதட்டுச்சாயத்தையே திருவாட்டி மாதவியும் பூசிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
மேலும், மகளிர் தினத்தின்போது ரிப்பன் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில் திருவாட்டி மாதவி கலந்துகொண்டது பார்ப்போரை வியக்க வைத்ததோடு விமர்சனங்களை எழுப்பியதாகவும் நம்பப்படுகிறது.
திருவாட்டி மாதவியின் இத்தகைய நடவடிக்கைகளை அறிந்த மேயர் பிரியாவின் தனிப்பட்ட உதவியாளரான சிவசங்கர் என்பவர் அவரை அழைத்து விவரம் கேட்டிருக்கிறார். உதட்டுச்சாயம் பூசிக்கொண்டு வரக்கூடாது என்று திரு சிவசங்கர், திருவாட்டி மாதவியைக் கண்டித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், திருவாட்டி மாதவி அதையும் பொருட்படுத்தவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.


