அருப்புக்கோட்டை: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் பிறந்த ஊரான அருப்புக்கோட்டை அருகே ராமானுஜபுரத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று கூறுகையில், ‘தவெக ஆட்சி குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. வாக்களித்த மக்கள்தான் கூற வேண்டும். இடைத்தேர்தலில் அனைவரும் அவரவர் கட்சிக்கு வேலை பார்த்தார்கள்.
மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு. போதை இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் கோரிக்கையாகும். அதுதான் பொற்காலம். நாங்கள் திமுக கூட்டணியில் உள்ளோம். அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக கூட்டணியில் இருந்தபடி தேர்தலைச் சந்திப்போம்’ என்று கூறினார்.
வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு சார்பில் போட்டியிடுவோம் என்றும், யாருடனும் கூட்டணி இல்லை என்றும் அதன் நிறுவனர் அண்ணாமலை (முன்னாள் பாஜக மாநிலத் தலைவர்) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இவ்வமைப்பு அடிமட்ட அளவிலான மக்கள் நல அரசியலை முன்னெடுத்து இத்தேர்தலை எதிர்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக முன்னதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் வார்டு மறுவரையறை, உறுப்பினர் எண்ணிக்கை நிர்ணயம் உள்ளிட்ட பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது. எனினும், உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை ஆணையம் இன்னும் அறிவிக்கவில்லை.
காரைக்குடி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, நாமக்கல் ஆகிய 4 புதிய மாநகராட்சிகள் மற்றும் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டு எல்லைகள், உறுப்பினர் எண்ணிக்கை குறித்த பணிகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
