தமிழகத்தில் தள்ளிப்போகும் உள்ளாட்சித் தேர்தல்: சிறப்பு அதிகாரிகள் பதவிக்காலம் நீட்டிப்பு

தமிழகத்தில் தள்ளிப்போகும் உள்ளாட்சித் தேர்தல்: சிறப்பு அதிகாரிகள் பதவிக்காலம் நீட்டிப்பு

கோப்புப் படம்: இந்து தமிழ் திசை

21 Oct 2026 - 5:22 pm

2 mins read

சென்னை: தமிழ்நாட்டில் கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் மீண்டும் தள்ளிப்போகிறது.

நிர்வாக வசதிக்காக, 28 மாவட்டங்களில் பணியாற்றிவரும் தனி அலுவலர்களின் (சிறப்பு அதிகாரிகள்) பதவிக்காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு அதிகாரபூர்வ உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தென்காசி, திருநெல்வேலி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய ஒன்பது மாவட்டங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்தது.

இதையடுத்து, அந்த மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க வரும் 2027 ஏப்ரல் 19ஆம் தேதி வரை புதிய தனி அலுவலர்களை நியமித்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கிராம ஊராட்சிகளுக்கு மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களும் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உதவி இயக்குநர்களும் (ஊராட்சிகள்), மாவட்ட ஊராட்சிகளுக்கு கூடுதல் ஆட்சியர்கள் அல்லது திட்ட இயக்குநர்களும் தனி அலுவலர்களாகச் செயல்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 46 ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைத்தல், ஊராட்சி ஒன்றியங்கள், கிராம ஊராட்சிகளின் எல்லைகளைச் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது ஊராட்சி ஒன்றியங்கள், 93 கிராம ஊராட்சிகள் தொடர்பாகவும், 23 மாவட்டங்களில் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை இறுதி செய்யும் பணிகளும் நிலுவையில் உள்ளன.

வார்டு மறுவரையறைப் பணிகளை முழுமையாக முடித்து, பட்டியல் இனத்தவர், பழங்குடியின பெண்களுக்கான இடஒதுக்கீட்டைச் சரியாக முறைப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இப்பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்த பிறகே, மாநில தேர்தல் ஆணையம் சார்பில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிகாரபூர்வ தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்