உள்ளாட்சித் தேர்தல்: பணிகளைத் தொடங்கிய தேர்தல் ஆணையம்

2 mins read
ed307ea7-047d-4847-9d26-ffe97f30c34e
மாநில தேர்தல் ஆணையம் வளாகம். - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் மிக விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்களைச் சுட்டிக்காட்டி தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தேர்தல் நடத்த ஏதுவாக மின்னணு வாக்குப்பெட்டிகளை பழுது நீக்கி தயார் நிலையில் வைக்க மாநிலத் தேர்தல் ஆணையம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தலுக்குத் தயாராகி வருவதாக இந்து தமிழ் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது.

இதற்கு முன்பு 2019ம் ஆண்டு 27 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தப்பட்டது.

பின்னர், தமிழகத்தில் சில புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. மேலும், வார்டுகளுக்கான மறுவரையறை பணிகளும் நடந்தன. அதன் பிறகு, கடந்த 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்த பின் ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 2019ல் தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. ஆனால் 2026ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையும் நடத்த வேண்டியுள்ளது.

எனவே, தமிழக அரசு உள்ளாட்சித் தேர்தலை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அரசின் இந்த முடிவுக்கு ஏற்ப மாநிலத் தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலுக்கான பணகளைத் தொடங்கி உள்ளதாக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் தமிழக வாக்காளர் பட்டியல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாக்குப்பெட்டிகளை தயார் நிலையில் வைக்க அதிகாரிகளுக்கு மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, மாநில தேர்தல் ஆணைய செயலாளர் எழுதியுள்ள கடித்தில், ஊரக உள்ளாட்சிகளின் தேர்தலுக்குத் தேவையான அனைத்து வகையான வாக்குப்பதிவு பொருள்களையும் தயார் நிலையில் வைப்பது அவசியமாகிறது என்றும். மேலும், இதில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டிகளை தயார் நிலையில் வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழக அரசியல் கட்சிகள் விரைவில் பிரசார நடவடிக்கைகளைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்