தமிழக உள்ளாட்சித் தேர்தல் மீண்டும் தள்ளிவைக்கப்பட வாய்ப்பு

தமிழக உள்ளாட்சித் தேர்தல் மீண்டும் தள்ளிவைக்கப்பட வாய்ப்பு

2 mins read
a80383d0-c1e2-471d-86dd-109f6e95eac6
தமிழக உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி முடிவுக்கு வந்தது.  - கோப்புப் படம்: கல்கி ஆன்லைன்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் மீண்டும் தள்ளிவைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.

தமிழக உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி முடிவுக்கு வந்தது.

இதையடுத்து, ஏறக்குறைய 92,000 உள்ளாட்சிப் பதவிகள் காலியான நிலையில் அடுத்த உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. மாற்று ஏற்பாடாக, ஊரக உள்ளாட்சிப் பணிகளைக் கவனிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

கடந்த ஒன்றரை ஆண்டாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத நிலையில், சிறப்பு அதிகாரிகளின் பணிக்காலம் மட்டுமே நீட்டிக்கப்பட்டிருந்தது. தற்போது தவெக அரசு ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், மாநில நிதிக் குழுவின் பதவிக் காலமும் நீட்டிக்கப்பட்டதையடுத்து, உள்ளாட்சித் தேர்தல் உடனடியாக நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலவரத்தை ஆய்வு செய்து, மாநில அரசுக்கு உரிய பரிந்துரைகள் வழங்க கடந்த ஆண்டு 7வது மாநில நிதிக்குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் முடிவடைய இருந்தது.

அதற்கு முன்னதாக அக்குழு தனது அறிக்கையைத் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாநில நிதிக்குழுப் பதவிக் காலத்தை டிசம்பர் 31ஆம் தேதிவரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால், தமிழக உள்ளாட்சித் தேர்தல் தாமதமாகும் சூழல் உருவாகியுள்ளது. புதிதாக உருவான மாவட்டங்களில் தொகுதி உட்பிரிவு வரையறைப் பணிகளும் நிலுவையில் இருப்பதால், 2027 மார்ச் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்