வசவாளர்கள் வாழ்க: மு.க. ஸ்டாலின் பேச்சு

வசவாளர்கள் வாழ்க: மு.க. ஸ்டாலின் பேச்சு

2 mins read
1df2ab63-de1b-4757-b26e-7f666f1c08f0
புதிதாக கட்சித் தொடங்குபவர்கள் திமுக அழியவேண்டும் என்று நினைப்பதாக மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: புதிது புதிதாக கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும் என்று பேசி வருகிறார்கள். வசவாளர்கள் வாழ்க என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

கொளத்தூர் தொகுதியில் ரூ. 2.85 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட முதல்வர் படைப்பகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கட்கிழமை (நவம்பர் 4) திறந்துவைத்தார்.

இந்த படைப்பகத்தில் படிப்பு தளம், பணியாற்றும் தளம், உணவுத்தளம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

ஒரே நேரத்தில் 51 பேர் படிக்கிற அளவுக்கு வசதிகள் உள்ளன. படிப்பிற்குத் தேவையான புத்தகங்கள் கொண்ட ஒரு நூலகமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

படைப்பகத்தை திறந்துவைத்துப் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், “புதிது புதிதாக கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும் என்று பேசி வருகிறார்கள். திமுக ஆட்சியின் 4 ஆண்டு கால சாதனைகளை அவர்கள் ஒரு கணம் எண்ணிப்பார்க்க வேண்டும். அதைப்பற்றியெல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. தேவையில்லாமல் அவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அண்ணா பாணியில் சொல்கிறேன். வாழ்க வசவாளர்கள்,” என்றார்.

மேலும் பேசிய அவர், நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த குரலுக்கு மத்திய அரசு ஒரு நாள் பணியத்தான் போகிறது. இன்று இல்லாவிட்டால் நாளை பணியும் என்று குறிப்பிட்டார்.

இதற்கிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் இரண்டு நாட்கள் அரசு மற்றும் கட்சி நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக செவ்வாய்க்கிழமை (நவம்பர் 5) கோவை செல்கிறார்.

மாவட்டம் வாரியாக ஆய்வுப் பணி மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், முதல்கட்ட ஆய்வுப் பணியை கோவையில் தொடங்குகிறார்.

குறிப்புச் சொற்கள்
மு.க.ஸ்டாலின்நீட்உள்கட்டமைப்பு