சென்னை: குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் சென்னை, பல்லாவரம் குடியிருப்புவாசிகள் பலர் பாதிக்கப்பட்டனர் என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 30 பேருக்கு வாந்தி, பேதி பாதிப்பு ஏற்பட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மூன்று பேர் உயிரிழந்து விட்டனர்.
இதையடுத்து, அந்தப் பகுதியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது, “குடிநீரால் பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரியவில்லை. அவர்கள் உட்கொண்ட உணவில் ஏதேனும் பாதிப்பிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் விசாரணை நடத்தி வருகிறோம். குடிநீரில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அந்தப் பகுதி முழுவதுமாகப் பாதிக்கப்பட்டிருக்கலாம். எனவே, ஆய்வுக்குப் பின்னரே சரியான காரணம் தெரியும்,” என்று கூறியுள்ளார்.
இந்தச் சூழலில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “குடிநீர் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட இடத்தில் ஆறு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனை நடந்து வருகிறது. உயிரிழப்புக்கான காரணம் குறித்து உடற்கூறு சோதனைக்குப் பிறகே கூற முடியும்,” என்றார்.

