தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வைப்புத் தொகையை இழந்தாலும் நம்பிக்கையை இழக்கவில்லை: சீமான்

2 mins read
3bf9c36c-f4ee-402b-8a84-cf24c96592e2
சீமான். - படம்: ஊடகம்

திருச்சி: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தனது கட்சி வேட்பாளர் தேர்தல் வைப்புத் தொகையை இழந்தாலும் நாம் தமிழர் கட்சி (நாதக) நம்பிக்கையை இழக்கவில்லை என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கள்ள வாக்குகள் செலுத்தியது, அதற்காகப் பணம் கொடுத்தது ஆகியவற்றின் மூலம்தான் திமுக வெற்றி பெற்றுள்ளது என்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

“எங்களிடம் நேர்மையைத் தவிர ஒன்றும் இல்லை. அவர்களிடம் (திமுக அணி) நேர்மை அறவே இல்லை. அவர்களுக்கு தேர்தல் ஆணையம், காவல்துறையினர் வேலை பார்த்தனர். எங்களுக்கு பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டன,” என்றார் சீமான்.

தங்களுக்கு விலைபோகாத வாக்குகள் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், எதிர்வரும் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார்.

“அந்த நம்பிக்கையில் பயணிக்கிறோம். கடந்த தேர்தலில் பாஜக, அதிமுகவின் வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு வந்தது என்பது கேவலமான பார்வை. திராவிடச் சிந்தனையாளர்கள்தான் அப்படி யோசிப்பார்கள். 15 கட்சிகளுடன் கூட்டணி வைத்து நீங்கள் வாங்கியது திமுகவுக்கான வாக்குகள் என்கிறீர்கள். ஆனால், தனித்து நின்று நாதக வாங்கிய வாக்குகளை அதிமுக, பாஜக வாக்கு என்கிறீர்கள்.

“நோட்டாவுக்கு கடந்த முறை 797 வாக்குகள் கிடைத்த நிலையில், தற்போது 6 ஆயிரம் ஆக அதிகரித்திருப்பதற்கு காரணம் என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.

அதிமுகவும் பாஜகவும் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை விரும்பாத கட்சிகள் என்று குறிப்பிட்ட அவர், அக்கட்சிகளை எதிர்ப்பதால் அவர்கள் தம்மை ஆதரிக்க வாய்ப்பே இல்லை என்றார்.

“நான் வீரன். எனக்குப் படையெல்லாம் தேவையில்லை. சண்டைக்குத் தனியாகத்தான் போவேன். என்னை அடிக்க வர்றான் நான்கு பேர் வாங்கனு கூட்டிட்டு போறதுக்கு நான் நாய், நரி கிடையாது. நான் புலி. தனித்துதான் வேட்டையாடுவேன். நான் தனியாகத்தான் நிற்பேன் என்று சொல்லி இருக்கிறேன்.

“கோழைதான் கூட்டத்தோடு நிற்க வேண்டும். தனித்து நிற்பவனுக்குத்தான் வீரமும் துணிவும் தேவை. எனது கோட்பாடு தனித்துத்தான் நிற்கும்,” என்றார் சீமான்.

இதற்கிடையே, பெரியார் குறித்து சீமான் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தது தொடர்பாக வடலூர் காவல்துறையினர் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

பெரியார் ஈவேரா குறித்து அண்மைக்காலமாக கடுமையாக விமர்சித்து வருகிறார் சீமான். இதையடுத்து அவருக்கு பெரியார் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். மேலும், சீமான் மீது மாநிலம் முழுவதும் ஆங்காங்கே உள்ள காவல் நிலையங்களில் புகார்களும் அளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வடலூர் காவல்துறையினர் சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டுக்கு நேரில் சென்று விசாரணைக்கு முன்னிலையாகுமாறு அழைப்பாணை அளித்தனர்.

குறிப்புச் சொற்கள்