அன்பைப் பணத்தால் ஈடுசெய்ய முடியாது: பெற்றோரைக் கவனிக்காத மகனுக்கு நீதிமன்றம் அறிவுரை

அன்பைப் பணத்தால் ஈடுசெய்ய முடியாது: பெற்றோரைக் கவனிக்காத மகனுக்கு நீதிமன்றம் அறிவுரை

கோப்புப்படம்: இந்து தமிழ் திசை

19 Sep 2026 - 8:33 pm

1 mins read

சென்னை: முதுமைக் காலத்தில் பெற்றோருக்குத் தேவைப்படும் அன்பையும் அரவணைப்பையும் பணத்தால் ஈடுசெய்ய முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுந்தர் மோகன் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த 80 வயது தொழிலதிபர் கோயல் என்பவர், தனது மகன் சூரஜ் மீது குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். “தனக்குச் சொந்தமான வீட்டை எழுதி வாங்கிக்கொண்ட மகன், முதிய வயதில் தன்னைக் கைவிட்டுவிட்டார். எனவே, மாதாந்தர பராமரிப்புச் செலவுத் தொகையை வழங்க மகனுக்கு உத்தரவிட வேண்டும்,” என்று அவர் கோரியிருந்தார்.

மனுவை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம், கோயலுக்கு மாதம் 75,000 ரூபாய் பராமரிப்புத் தொகையாக வழங்க சூரஜுக்கு உத்தரவிட்டது.

இத்தீர்ப்பை எதிர்த்து சூரஜ், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுந்தர் மோகன், “மனுதாரரான கோயல், தனது பிற சொத்துகள் மூலம் கிடைக்கும் வாடகை வருமானத்தை மறைத்துவிட்டு கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே, அவருக்குப் பராமரிப்புத் தொகை பெற சட்டப்படி உரிமை இல்லை. இதன் காரணமாக, மாதம் 75,000 ரூபாய் வழங்கக் கோரிய கீழ் நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

அதேவேளையில், முதிய வயதில் மூத்த குடும்ப உறுப்பினர்களுக்குத் தேவைப்படும் அன்பையும் ஆதரவையும் பணத்தால் ஒருபோதும் ஈடுசெய்ய முடியாது. தந்தை - மகன் இடையிலான பிரச்சினைகள் பேசித் தீர்க்கப்பட்டு, மீண்டும் சுமுகமான உறவு ஏற்படும் என்று நம்புகிறேன்,” என நீதிபதி சுந்தர் மோகன் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்