சென்னை: அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு சனிக்கிழமை (செப்டம்பர் 14) சென்னை திரும்பிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமரை நேரில் சந்தித்து நிதி கேட்கப் போவதாக அறிவித்துள்ளார்.
17 நாள் அமெரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை விமான நிலையம் வந்த முதல்வருக்கு அரசு சார்பிலும், திமுக சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
அமெரிக்க பயணம் வெற்றிகரமாக அமைந்ததாகக் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மெட்ரோ ரயில் நிதி, கல்வி நிதி விவகாரம் தொடர்பாக பிரதமரை நேரில் சந்திக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.
“அமெரிக்க பயணம் வெற்றிகரமாகவும், சாதனை பயணமாகவும் அமைந்துள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்கான சாதனை பயணமாகவும் அமைந்துள்ளது. அமெரிக்காவில் இருந்த 17 நாட்களும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உலகின் தலைசிறந்த 25 நிறுவனங்களை சந்தித்து 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ரூ.7,616 கோடி முதலீடு பெறப்பட்டதன் மூலம் 11,516 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மெட்ரோ ரயில் நிதி, கல்வி நிதி விவகாரம் தொடர்பாக பிரதமரை நேரில் சந்திக்க உள்ளேன்,” என்றார்.
அப்போது ஜிஎஸ்டி குறித்து நிர்மலா சீதாராமனிடம் ஹோட்டல் அதிபர் பேசியது தொடர்பாகவும், பின்னர் அவர் மன்னிப்பு கேட்டது குறித்தும் முதல்வரிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அவர், “ஜிஎஸ்டி குறித்த நியாயமான கோரிக்கைகளை ஹோட்டல் உரிமை யாளர் முன்வைத்தார். அதனை நிதி அமைச்சர் கையாண்டவிதம் என்பது மிகவும் வெட்கப்பட வேண்டிய ஒன்று. இதனை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்,” என்று குறிப்பிட்டார்.
தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் 27ஆம் தேதி இரவு அரசு முறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தப் பயணத்தில் மொத்தம் ரூ.7,616 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

