2024ல் மட்டும் 324 தமிழக மீனவர்களைக் கைதுசெய்த இலங்கைக் கடற்படை

2024ல் மட்டும் 324 தமிழக மீனவர்களைக் கைதுசெய்த இலங்கைக் கடற்படை

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
படங்கள்: இந்திய ஊடகம்

24 Aug 2024 - 6:55 pm

2 mins read

சென்னை: இலங்கைக் கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பது தொடர்பில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி இருக்கிறார்.

அக்கடிதத்தில், “நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவர்களை ஆகஸ்ட் 23ஆம் தேதி இலங்கைக் கடற்படை கைதுசெய்துள்ளது. அவர்களது மீன்பிடி விசைப்படகையும் பறித்துச் சென்றுள்ளது. இதுபோன்று தொடர்ந்து நடைபெற்று வருவதை ஏற்கெனவே பலமுறை சுட்டிக்காட்டியுள்ளேன்,” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டில் மட்டும் இதுவரை 324 மீனவர்களும், 44 படகுகளும் இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இதுபோன்ற தொடர் கைது நடவடிக்கைகளால் தமிழ்நாட்டு மீனவச் சமூகத்தினர் பேரின்னல்களைச் சந்தித்து வருவதுடன் அவர்களது வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் சுட்டியுள்ளார்.

கடந்த இரு வாரங்களில், இலங்கையைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபர்கள் கடலில் மீனவர்களைத் தாக்கிய சம்பவங்களையும் சுட்டிக்காட்டியுள்ள திரு ஸ்டாலின், இப்பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டியது அவசியம் என்று தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைந்து விடுவிப்பதற்கு, உறுதியான தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார்.

இதனிடையே, வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை கைதுசெய்யும் இலங்கைக் கடற்படையினரின் தொடர் அத்துமீறல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஒருபுறம் கைது, இன்னொருபுறம் கடற்கொள்ளையர்களை ஏவித் தாக்குதல் என மீனவர்கள்மீது இருமுனைத் தாக்குதலை இலங்கை அரசு நடத்தி வருவதாகக் கூறிய அவர், மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்