தஞ்சாவூர் பெரிய கோயிலில் சிறப்பாக நடைபெற்ற மாட்டுப் பொங்கல்

1 mins read
c6337087-159d-4c25-8ca6-76a298d35f5e
தஞ்சாவூர் பெரிய கோயிலில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 16) மாட்டுப்பொங்கலை முன்னிட்டு, நந்திக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. - படம்: தினத்தந்தி
multi-img1 of 3

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோயிலில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 16) மாட்டுப் பொங்கல் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

தஞ்சை பெருவுடையார் ஆலயம் என்கிற பெரியகோயிலில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு 108 பசுமாடுகளுக்கு கோ-பூசை நடைபெற்று, இரண்டு டன் காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள் உள்ளிட்டவைகளால் நந்தியெம்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

கிட்டத்தட்ட 2,000 கிலோ பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட கத்திரிக்காய், வெண்டைக்காய், பூசணிக்காய், கேரட், பீட்ரூட் உள்ளிட்ட அனைத்து வகைக் காய்கறிகள், ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, வாழை உள்ளிட்ட பழங்கள், மலர்கள், இனிப்பு வகைகள் கொண்டு பெரிய நந்திக்கு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து 16 வகையான தீபாராதனைகள், பூசைகள் இடம்பெற்றன.

பின்னர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட 108 பசுமாடு கன்றுகள் அலங்கரிக்கப்பட்டு மஞ்சள், சந்தனம், குங்குமமிட்டு, மலர்த் தூவி, வேட்டி, சேலை, துண்டு அணிவித்து வழிபாடும் நடத்தப்பட்டது.

வாழைப்பழங்கள், பொங்கல் மாடுகளுக்கு உண்ண கொடுக்கப்பட்டன. ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு நந்தியெம் பெருமானை வழிபட்டனர்.

குறிப்புச் சொற்கள்