சென்னை: தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம், தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 4) மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து தொகுதிக்கு தொடர்பில்லாத வெளிநபர்கள் உடனடியாக வெளியேறத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 6) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தல் விதிகளின்படி, பிரச்சாரம் நிறைவடையும் நாளன்று மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் வரை, 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 126ன்கீழ் கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.
இதுகுறித்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்களை நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது. தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் (வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், எக்ஸ் தளம்), குறுஞ்செய்திகள், மின்னணு ஊடகங்கள் வாயிலாக வாக்கு சேகரிக்கும் எந்தவொரு பிரசாரத்தையும் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இசை நிகழ்ச்சிகள் அல்லது பொழுதுபோக்கு அம்சங்கள் மூலம் வாக்காளர்களைக் கவர முயல்வதும் குற்றமாகும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விதியை மீறுவோருக்கு இரண்டு ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம், அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பிரசாரத்தின் பொருட்டு தொகுதிக்கு வெளியிலிருந்து அழைத்து வரப்பட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் வெளியேறினர். இதையடுத்து, திருமண மண்டபங்கள், விடுதிகள், சமூகக் கூடங்களில் வெளிநபர்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பதைத் தேர்தல் பறக்கும் படையினரும் காவல்துறையினரும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
