மதுரை: சரக்குக் கொள்கலன் லாரியில் கடத்திச் செல்லப்பட்ட 1,400 கிலோ போதைப்பொருள் பிடிபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் தொடர்பில் லாரி ஓட்டுநர் உள்பட நால்வரைக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.
தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட அனைத்துவகை போதைப்பொருள்களைத் தயாரிக்கவும் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆயினும், மாநிலத்தில் போதைப்பொருள் புழக்கம் பரவலாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், கிருஷ்ணகிரியிலிருந்து மதுரைக்குச் சென்ற சரக்குக் கொள்கலன் லாரியை அதிகாரிகள் சோதனையிட்டபோது, அதில் போதைப்பொருள் கடத்திச் செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் காவல்துறைக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, கோழித் தீவனம் ஏற்றி வந்த அந்த லாரியை மதுரை சர்வேயர் காலனி பகுதியில் அதிகாரிகள் இடைமறித்து சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அதனுள் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்கள் இருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர்.
சரக்குக் கொள்கலனுக்குள் 94 மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த 1,400 கிலோ போதைப்பொருள்களையும் அதனை ஏற்றி வந்த லாரி உள்ளிட்ட நான்கு வாகனங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கைதான நால்வரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.