மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடுத்த ஆண்டு முழு பயன்பாட்டுக்கு வரும் என தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது முதல் கடந்த டிசம்பர் 9ஆம் தேதி வரை 934 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது என்றும் இதுவரை 14.21 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
கடந்த 23 வாரங்களில் முதல்வரின் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ஏறக்குறைய 41,000 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
“தமிழக அரசின் அழுத்தம் காரணமாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த மருத்துவமனையின் முதல்கட்டப் பிரிவு அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு வேகப்படுத்தும்,” என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.


