தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மதுரை விமான நிலைய ஓடுபாதை ரூ.105 கோடி மதிப்பில் விரிவாக்கம்

2 mins read
3545ea79-19de-4977-89f2-212284f9d753
மதுரை விமான நிலையம். - படம்: கோப்புப்படம்

மதுரை: மதுரை விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கத்திற்காக ரூ.105 கோடிக்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை, கோவையை அடுத்து அதிக பயணிகளைக் கையாளும் விமான நிலையமாக மதுரை விமான நிலையம் உள்ளது. மூன்று விமானங்கள் மட்டுமே நிறுத்தும் விதமாக இருந்த விமான நிலையம் தற்போது எட்டு விமானங்கள் வந்து இறங்கி செல்லும்விதமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

மதுரையில் இருந்து சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி, மும்பை போன்ற நகரங்களுக்கும் சிங்கப்பூர், துபாய், இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் விமானச் சேவை வழங்கப்பட்டு வருகிறது.

ஆண்டுக்கு 12 லட்சம் பயணிகள் இங்கிருந்து பயணம் செய்து வரும் நிலையில், 502 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வந்த பழைய விமான நிலையத்தை அனைத்துலக விமான நிலையமாக மாற்றுவதற்கு தமிழக அரசு ரூ.200 கோடிக்கு 633 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முடிவு செய்தது.

விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக விமான நிலையத்தின் ஓடுபாதையை தற்போதுள்ளதைவிட, 1,500 மீட்டர் தூரத்திற்கு விரிவாக்கம் செய்ய வேண்டும்.

அதனால் விமான நிலையத்தின் கிழக்குப் பக்கத்தில் ஓடுபாதையின் தூரத்தை அதிகரிக்க வேண்டியுள்ளதால், அதற்கேற்ப திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் சின்ன உடைப்பு மற்றும் ஆனைகுளம் கண்மாயின் நீர்ப்பிடிப்பு பகுதி நிலங்களை கையகப்படுத்த வேண்டியுள்ளது.

கையகப்படுத்தும் பகுதிகளுக்குப் புதிதாக சாலை அமைப்பது, அங்கு செல்லும் நீர்வழித்தட வாய்க்காலை பலப்படுத்துவது, கால்வாய் அமைப்பது போன்ற பணிகள் தொடர இருப்பதாக திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்