2,000 பயணிகளைக் கையாளும் வகையில் மதுரை விமான நிலைய முனையம் விரிவாக்கம்

2,000 பயணிகளைக் கையாளும் வகையில் மதுரை விமான நிலைய முனையம் விரிவாக்கம்

2 mins read
ffa79a77-87ab-4bc5-83e1-7a26b26d9f1f
மதுரை விமான நிலையத்தின் தற்போதைய முகப்பு தோற்றம். - படம்: இந்து தமிழ் திசை

மதுரை: மதுரை அனைத்துலக விமான நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அண்மைக்காலமாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனையடுத்து, பயணிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் முனைய விரிவாக்கப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்திட்டம் முழுமையாக நிறைவடையும்போது ஒரே நேரத்தில் 2,000 பயணிகளைக் கையாள்வதற்கு வழிவகை செய்யப்படும்.

கடந்த 2024-2025ஆம் ஆண்டில் மட்டும் 13,824 விமானச் சேவைகள் வழங்கப்பட்டதாகப் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

திருவனந்தபுரம், திருச்சி விமான நிலைய எல்லைகளில் மோசமான வானிலை நிலவினால் மதுரையில் விமானங்கள் அவசரமாகத் தரையிறக்கப்படுகின்றன.

தவிர்க்க முடியாத சூழலில் பாதுகாப்புப் படையினரின் விமானங்களும் இரவு நேரத்தில் மதுரை விமான நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றன.

இதனிடையே, விமான நிலைய முனையத்தை விரிவாக்கம் செய்வதற்கான விரிவான திட்ட அறிக்கையும் அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டு உள்ளது. விரிவாக்கப் பணிகளுக்கான ஆலோசகரை நியமிக்கும் வகையில் ஒப்பந்தப்புள்ளிகள் தற்போது கோரப்பட்டுத் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

சுற்றுச்சூழல் துறையிடம் முறையான தடையில்லாச் சான்றிதழ்களைப் பெறுவதற்காக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளையும் அணுகியுள்ளனர்.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் 17,600 சதுர மீட்டர் பரப்பளவோடு கூடுதலாக 10,000 சதுர மீட்டர் சேர்க்கப்படவுள்ளது.

இதன் மூலம் 1,280 உள்நாட்டுப் பயணிகளையும் 720 அனைத்துலகப் பயணிகளையும் ஒரே நேரத்தில் கையாளுவது சாத்தியமாகும்.

பயணிகளின் உடைமைகளை விரைவாகக் கையாள்வதற்கு இரண்டு புதிய சுழற்பட்டை அமைப்புகளும் நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓடுபாதை விரிவாக்கப் பணியில் 3.1 கிலோமீட்டர் பணிகள் நிறைவடைந்து மாற்றுப் பாதைக்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

“தடையில்லாச் சான்றிதழ்கள் கிடைத்தவுடன் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டுப் பணிகள் தொடங்கும்,” என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முனைய விரிவாக்கப் பணிகள் விரைவாக நிறைவடையும்போது தென் மாவட்டப் பயணிகளின் சிரமங்கள் பெருமளவில் குறையும் எனக் கருதப்படுகிறது.

மேலும், விமான நிலைய வளர்ச்சி தென்மாவட்டங்களின் வணிகத்தையும் சுற்றுலாத் துறையையும் ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விமான நிலையத்தில் சரக்கு சேவையை எளிதில் கையாளும் வகையில் புதிய உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

குறிப்புச் சொற்கள்
விமான நிலையம்பயணிகள்உள்கட்டமைப்புமதுரை