மதுரை: அக்டோபர் 1ஆம் தேதி முதல், மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்பட இந்திய விமான நிலைய ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
காலை 6.55 மணி முதல் இரவு 9.25 மணி வரை மட்டுமே அது செயல்பட்டு வந்தது. இந்திய அரசின் நடவடிக்கையால் மதுரைக்குச் செல்லும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள விமான நிலைய இயக்குநர், இரவு நேரத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமானங்களை இயக்க தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தை வெளிநாடுகளுக்கு விமானங்களை இயக்கும் அனைத்துலக முனையமாக அறிவிக்க வேண்டும் என தென் மாவட்ட மக்கள் தொடர்ந்து கோரி வந்தனர்.
அனைத்துலக முனையமாக அறிவிக்க வேண்டுமெனில், அந்த விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருப்பதுடன், அதற்கேற்ற வகையில் பணியாளர்களும் நியமிக்கப்பட வேண்டியது அவசியம்.
இதன்படி தற்போது இந்திய தொழில் பாதுகாப்புப் படையினர், விமான நிலைய ஊழியர்கள், சுங்க இலாகாவினர், குடிநுழைவு அதிகாரிகள் உள்ளிட்டோர் 24 மணி நேரமும் பணியில் இருக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் எதிரொலியாக, மதுரை விமான நிலையம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 1) முதல் 24 மணி நேரமும் செயல்படும்.
இந்திய விமான நிறுவனங்கள் இந்த மாற்றத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளுமாறு விமான நிலைய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
விமான நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்
இதற்கிடையே, அக்டோபர் 29 முதல் 2025 மார்ச் 31 வரை விமான நிறுவனங்களின் குளிர்காலப் போக்குவரத்து அட்டவணை வெளியாகும். இதில், மதுரையிலிருந்து சேவை வழங்க விமான நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, புதுடெல்லி போன்ற நகர்களுக்கு உள்ளூர் விமானச் சேவைகளும் துபாய், கொழும்பு, சிங்கப்பூர் போன்ற இடங்களுக்கு வெளிநாட்டுச் சேவைகளும் மதுரையிலிருந்து அன்றாடம் செயல்பாட்டில் உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
விமானச் சேவை விரிவாக்கத்துக்கு வாய்ப்பு
இந்நிலையில், கோலாலம்பூர், பக்ரேன், சார்ஜா, அபுதாபி, பேங்காக் உள்ளிட்ட இடங்களுக்கும் உள்நாட்டில் மேலும் பல நகர்களுக்கும் மதுரையிலிருந்து விமானச் சேவை தொடங்கும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.

