மதுரை – சென்னை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானச் சேவை நிறுத்தப்பட வாய்ப்பு: முகவர்கள் அதிருப்தி

மதுரை – சென்னை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானச் சேவை நிறுத்தப்பட வாய்ப்பு: முகவர்கள் அதிருப்தி

1 mins read
e6579acf-cb48-45af-8b2a-a31d6407a4b4
சென்னை–மதுரை–சென்னை வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானச் சேவை. - படம்: தினத் தந்தி
Google News Preferred Icon

சென்னை: சென்னை– மதுரை–சென்னை வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானச் சேவை வரும் அக்டோபர் 25 முதல் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 68 ஆண்டுகளாக இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்களால் இயக்கப்பட்டு வந்த இச்சேவை நிறுத்தப்பட்டால், இண்டிகோ மட்டுமே ஒரே சேவை நிறுவனமாக நீடிக்கும் நிலை ஏற்படும்.

போதிய பயணிகளின் வருகை இல்லை எனக் காரணம் கூறப்பட்டாலும், வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) அன்று சென்னையில் இருந்து மதுரைக்கு 159 பயணிகளும் மதுரையிலிருந்து சென்னைக்கு 70 பயணிகளும் பயணம் செய்ததாகப் பயண முகவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், சென்னை–மதுரை வழித்தடம் லாபகரமாக இல்லை என்றால், மதுரை–பெங்களூரு சேவை மட்டும் எவ்வாறு லாபகரமாக இயங்கும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தென் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரை நேரில் சந்தித்துப் பேசி, இச்சேவையைத் தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முகவர்கள் கோரியுள்ளனர்.

திருச்சியிலிருந்து பல்வேறு இடங்களுக்குப் புதிய சேவைகளைத் தொடங்கியுள்ள நிலையில், மதுரை மட்டும் ஏன் புறக்கணிக்கப்படுகிறது என்று மதுரை, சிவகாசி, காரைக்குடியைச் சேர்ந்த முகவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

அக்டோபர் முதல் மார்ச் வரையிலான உச்சக்கட்ட சுற்றுலா காலத்தில் இச்சேவை ரத்து செய்யப்படுவதால் கட்டணங்கள் உயர்ந்து உள்ளூர் சுற்றுலாத்துறை கடுமையாகப் பாதிக்கப்படும் என மதுரை டிராவல்ஸ் நிர்வாகி ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
விமானம்மதுரைசென்னைபயணிகள்