சென்னை: மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கையில், கூடுதல் ஆவணங்கள் இணைக்கப்பட்டு, மீண்டும் மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரை, கோவை உள்ளிட்ட நான்கு நகரங்களில் மெட்ரோ ரயில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்த, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
கோவையில், 39 கிலோமீட்டர் நீளம்கொண்ட மெட்ரோ ரயில் திட்டம் அமையவுள்ளது. மொத்தம் 32 ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
சென்ற ஆண்டு ஜூலை மாதம், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகள் ஒப்படைக்கப்பட்டன. கூடுதல் ஆவணங்களுடன் மீண்டும் விரிவான திட்ட அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசாங்கம், தமிழக அரசாங்கத்துக்கு அறிவுறுத்தியது.
இப்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள திட்ட அறிக்கைகளில் கூடுதல் ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த, மத்திய, மாநில அரசாங்கங்கள் இரண்டும் ஆவலாக இருப்பதால் நிதியுதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படாது என்ற நம்பிக்கை நிலவுவதாகக் கூறப்படுகிறது.