மதுரை: மதுரையில் தற்போது இயங்கிவரும் விமான நிலையத்தை அனைத்துவிதமான வசதிகளும் கொண்ட அனைத்துலக விமான நிலையமாக மாற்ற இந்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இந்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு ஏற்கெனவே மக்களவையில் கூறியிருந்தார்.
மேலும், மதுரை விமான நிலையத்துக்கு அனைத்துலக விமான நிலையத்துக்கான அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கியமான திட்டங்கள், முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அவற்றுள் ஒன்றாக, தமிழ்நாட்டில் உள்ள மதுரை விமான நிலையத்தை அனைத்துலக விமான நிலையமாக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தென் தமிழகத்தின் முக்கிய நுழைவுவாயிலாக உள்ள மதுரை விமான நிலையம், சுற்றுலா, புனித யாத்திரையை ஊக்குவிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதன் மூலம் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பங்களிக்கிறது.
மதுரை விமான நிலையத்தை அனைத்துலக தரத்துக்கு மேம்படுத்தும் நடவடிக்கை தமிழகத்தின் பொருளியல் வளர்ச்சிக்கு மிக அவசியமானது எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். பல்வேறு நாடுகளுடன் இணைக்கப்படும் பட்சத்தில் மதுரை விமான நிலையம் வர்த்தக, சுற்றுலா நடவடிக்களை ஊக்குவிக்கும் என்றும் சுட்டிக்காட்டினர்.
இந்திய விமானப் போக்குவரத்துக்கு மதுரை முக்கியமான இடம் என்பதால் மேம்பாட்டு நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும் என்றும் அனைத்துத் தரப்பினரின் கருத்துகளும் கவனத்தில் கொள்ளப்படும் என்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

