மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் கடுமையான நிதி நெருக்கடியால் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது மிகுந்த மனவலியை அளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பல்கலைக்கழகத்தில் பணியாளர்கள் விதி மீறலோடு பணியமர்த்தப்பட்டதாகக் கூறி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியைக் கடந்த 17 ஆண்டுகளாகத் தமிழக அரசு வழங்காமல் இருப்பது நியாயமல்ல.
பணி நியமனத்தில் முறைகேடு என்றால் அதனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, வழங்க வேண்டிய நிதியை நிறுத்துவது எவ்வகையில் நியாயமாகும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2007ஆம் ஆண்டிலிருந்து 2024ஆம் ஆண்டுவரை தமிழ்நாடு அரசால் மதுரை பல்கலைக்கழகத்திற்கான ஈட்டுநிதி வழங்கப்படவில்லை.
ஒருவேளை நிலுவைத்தொகை உரிய நேரத்தில் வழங்கப்பட்டிருந்தால் இன்றைய நாளில் ரூ. 500 கோடி அளவிற்கு உபரித்தொகை பல்கலைக்கழகத்தில் கையிருப்பாக இருந்திருக்கும் எனவும் தணிக்கை அறிக்கை கூறுகிறது.
காமராஜர் பல்கலைக்கழகம் மட்டுமல்ல, தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் ஊதியம் முறையாக வழங்கப்படுவதில்லை.
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்களை இத்தகைய மோசமான நிலையில் வைத்துவிட்டு கல்வியிற் சிறந்த தமிழ்நாடு என வீண் தற்பெருமை பேசுவது வெட்கக்கேடானது.
பல்கலைக்கழக வேந்தராக தமிழ்நாட்டு முதல்வரே செயல்படுவார் எனும் நிலையை எட்டிய பிறகும் திமுக அரசு பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தைச் சீர்படுத்தி, நிதிநிலைமையை மேம்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது கண்டனத்துக்குரியது.
தொடர்புடைய செய்திகள்
தமிழ்நாடு அரசு மதுரை காமராஜர் பல்கலைக்கழத்திற்குத் தரவேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கி மூடப்படும் நிலையிலிருந்து பல்கலைக்கழகத்தை மீட்க வேண்டும்.
சீரழிந்துள்ள தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தையும் சீரமைத்து, நிதி நிலைமையை மேம்படுத்தி, காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன் என்று சீமான் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் (Madurai Kamaraj University) 1966ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, பெருந்தலைவர் மறைவுக்குப் பிறகு அவருடைய நினைவாக 1978ஆம் ஆண்டு காமராஜர் பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்பட்டது.
18 பாடசாலைகளுடன், 72 திணைக்களங்களை கொண்டுள்ள இப்பல்கலைக்கழகமானது 109 இணைக்கப்பட்ட கல்லூரிகளையும், 7 மாலைநேரக் கல்லூரிகளையும் உறுப்பு கல்லூரிகளாகக் கொண்டுள்ளது.
கடந்த 60 ஆண்டுகளாக தமிழ்நாட்டு இளம்பிள்ளைகள் உயர்கல்வி பயில வாய்ப்பளித்து பல இலட்சம் பட்டதாரிகளையும் உருவாக்கிய பெருமைக்குரியது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வித்துறை 2010ஆம் ஆண்டில் ஏறத்தாழ 50,000 மாணவர்களைக் கொண்டிருந்தது, அதே துறை 2023ஆம் ஆண்டில் 6,000 மாணவர்களையே கொண்டுள்ளது.
இதற்கு முழுமுதற் காரணம் இந்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழு, தொலைதூரக் கல்வியானது அந்தந்த மாநில எல்லைக்குள் மட்டுமே இருக்கவேண்டும் என்ற புதிய விதியை நிர்ணயித்து, பல்கலைக்கழகத்தில் அதிகளவில் மாணவர் சேர்க்கையைத் தடுத்து நிறுத்தியதேயாகும். இதனால் பல்கலைக்கழகத்தின் வருமானம் பெருமளவு குறைந்தது.
தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களின் ஆடம்பரச் செலவுகளைக் கட்டுப்படுத்தத் தவறியதோடு, பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கான ஒழுங்கு நடவடிக்கை விதிகளையும், பணிவிதிகளையும் ஏற்படுத்தத் தவறிய தமிழ்நாடு அரசின் அலட்சியமும் பல்கலைக்கழக நிர்வாகம் சீர்கெட மற்றுமொரு காரணமாகும்.
அண்ணா பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், காமராஜர் பல்கலைக்கழகம், தமிழ் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் தலைசிறந்த பத்திற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிகள் இன்னும் நிரப்பப்படவில்லை.
பாஜக ஆளுநர் - திமுக அரசின் மோதல் போக்கு தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தை முற்று முழுதாகச் சீரழித்து தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது என்று தனது அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார்.

