மதுரை: தமிழ்நாட்டில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், மல்லிகைப்பூ விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் சந்தையில் மல்லிகைப்பூ விலை கணிசமாகக் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகக் குளிர் மற்றும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப்பூ விளைச்சல் குறைந்திருந்தது. அதன் காரணமாக மல்லிகைப்பூ கிலோ ரூ.4,000 முதல் ரூ.6,500 வரை அதிகரித்தது.
ஆனால் தற்போது கோடைக்காலம் தொடங்கியதால், சந்தைகளில் மல்லிகைப்பூ வரத்து அதிகரித்து, விலை சரிவடைந்துள்ளது.
தற்போது மல்லிகைப்பூ, கிலோ ரூ.200 முதல் ரூ.350 வரை மட்டுமே விற்பனையாகி வருகிறது.
குறிப்பாக மதுரை மாட்டுத்தாவணி மற்றும் திருமங்கலம் பூச் சந்தைகளில் அதிகாலை முதலே மல்லிகைப் பூக்கள் பெருமளவில் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் விலை மேலும் குறைந்து பொதுமக்களுக்கு மலிவாகக் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.
தமிழகத்தில் புகழ்பெற்ற “மதுரை மல்லி” முக்கியமாக திருமங்கலம், உசிலம்பட்டி, செல்லம்பட்டி, கள்ளிக்குடி, சோழவந்தான், அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பயிரிடப்படுகிறது.
இந்தப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் மல்லிகைப்பூச் சாகுபடியை முக்கியத் தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விருதுநகர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பக்கத்து மாவட்டங்களிலிருந்தும் பூக்கள் மதுரைச் சந்தைகளுக்குக் கொண்டுவரப்படுகின்றன.

