மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் அமைந்திருந்த நுழைவுத் தோரண வாயிலை இடிக்கும் பணியின்போது அது இடிந்து விழுந்து, ஜேசிபி இயந்திரத்தை இயக்கிய ஆடவர் உயிரிழந்தார்.
‘மதுரை மாநகர் வந்துவிட்டது’ என்பதை மற்ற ஊர் மக்களுக்குத் தெரிவிக்கும் வகையிலும் மதுரையின் அடையாளமாகவும் மாட்டுத்தாவணி தோரண வாயில் திகழ்ந்து வந்தது.
ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டை முன்னிட்டு, 1981ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி அத்தோரண வாயில் திறக்கப்பட்டது. அதற்கு நக்கீரர் தோரண வாயில் எனப் பெயரிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், அது போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாகக் கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்டு, உயர் நீதிமன்றமும் அதனை இடிக்க உத்தரவிட்டது.
அதன்படி, இரண்டு ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு தோரண வாயிலை இடிக்கும் பணி புதன்கிழமை (பிப்ரவரி 12) இரவு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, அது ஜேசிபி இயந்திரம் ஒன்றின்மீது விழுந்தது. அதனால், அவ்வியந்திரத்தை இயக்கிவந்த மதுரை சம்பக்குளம் பகுதியைச் சேர்ந்த நாகலிங்கம், 32, என்பவர் அவ்விடத்திலேயே உடல் நசுங்கி மாண்டுபோனார்.
மேலும், அவ்வியந்திரத்தின் அருகே நின்றுகொண்டிருந்த ஒப்பந்ததாரர் நல்லதம்பி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

