மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான ரூ. 60 கோடி மதிப்பிலான நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்த வழக்கில், முன்னாள் சார்பதிவாளர் அனந்தராமனை மதுரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து, இவ்வழக்கில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.
மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிக்க அரசு அதிகாரிகள் சிலர் முறைகேடுகளில் ஈடுபட்டதும் 60 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தைத் தனியாருக்குத் தாரைவார்த்து மோசடி செய்வதும் தெரியவந்துள்ளது.
போலி ஆவணங்கள் தயாரித்து தனிநபர்கள் பெயருக்குப் பட்டா மாற்றம் செய்து ஆக்கிரமிப்பு செய்திருப்பதாகக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
கோவில் நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில், காவல்துறை விசாரணை மேற்கொண்டு 19 பேர் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது.
இவ்வழக்கில் போலி ஆவணங்கள் தயாரிக்க உடந்தையாக இருந்த முன்னாள் வட்டாட்சியர் அன்பழகன், கிராம நிர்வாக அலுவலர் அரசன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் வட்டாட்சியர் அன்பழகன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், 2021ஆம் ஆண்டு முறப்பநாடு சார்பதிவாளர் அலுவலகத்தில் இந்த நிலத்திற்கான போலி ஆவணங்களைச் சட்டவிரோதமாகப் பதிவு செய்ய உதவிய குற்றத்திற்காக முன்னாள் சார்பதிவாளர் அனந்தராமன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவில் சொத்துகளைப் போலிப் பத்திரங்கள் மூலம் ஆக்கிரமித்த இந்தச் சதித்திட்டத்தில் உயர் அதிகாரிகள் மேலும் பலருக்குத் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
தலைமறைவாக உள்ள எஞ்சிய நபர்களைப் பிடிக்கக் காவல்துறையினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.


