மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை (செப்டம்பர் 17) நடைபெறுகிறது.
குடமுழுக்கைக் காண ஒட்டுமொத்த மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்துள்ளனர்.
கோவிலின் 12 கோபுரங்களும் ஏறக்குறைய ஐந்து டன் எடையுள்ள வண்ண மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
புது மண்டபப் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாகக் கைவினைஞர்களும் பணியாளர்களும் தொடர்ந்து பணியாற்றி, நுட்பமான அலங்கார மாலைகளைக் கட்டினர்.
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பக்தர்களுக்காகத் தமிழக அரசு பல்வேறு வசதிகளைச் செய்துள்ளது.
வியாழக்கிழமை அதிகாலை நான்கு மணியளவில் சிறப்பு பூசையுடன் குடமுழுக்கு நிகழ்வு தொடங்கும். காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் மகா குடமுழுக்கு கோலாகலமாக நடந்தேறும் என்றும் கோவில் நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு வழிபாடுகள் நிறைவடைந்த பின்னர், காலை 10 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.
பக்தர்களின் வசதிக்காக முக்கியப் பகுதிகள், 51 இடங்களில் எல்இடி திரைகள் வைக்கப்பட்டு, நிகழ்வுகள் நேரலையில் திரையிடப்படுகின்றன. குடிநீர் வசதிக்காக 30 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்களும் 26 குடிநீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
சித்திரை வீதிகளில் நுழைவுச்சீட்டு பெற்ற பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். பொதுமக்கள் நான்கு ஆவணி மூல வீதிகள் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று காவல்துறை அறிவித்துள்ளது.
போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஐந்து இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மதுரை நகரம் முழுவதும் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
