மதுரை: இன்னும் ஆறு மாதங்களில் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தொடங்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் ரூ.11 ஆயிரத்து 340 கோடியில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதனையொட்டி, அதற்கான ஆயத்தப் பணிகள் தொடர்பில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் அர்ஜுனன் தலைமையில் சிறப்புக் குழுவினர் சனிக்கிழமையன்று (டிசம்பர் 21) மதுரையில் ஆய்வு மேற்கொண்டனர்.
மதுரை ரயில் நிலையப் பகுதியில் தொடங்கி ஆண்டாள்புரம் வரை மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதில் சிக்கல் நிறைந்த இடங்களில் அக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திரு அர்ஜுனன், “மதுரை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் இன்னும் ஆறு மாதங்களில் தொடங்கப்பட வாய்ப்புள்ளது. வைகை ஆற்றின் கீழ்ப்பகுதியில் மெட்ரோ ரயிலில் செல்லும்போது வியப்பாக இருக்கும்,” என்று சொன்னார்.