இயற்கையைக் காக்க போராடும் மதுரை மக்கள்

3 mins read
f5942263-2c94-4ae3-a12e-b40ba39204ae
அரிட்டாப்பட்டியில் அமைய உள்ள சுரங்கத்திற்கு எதிராக கிராம மக்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.  - படம்: தமிழக ஊடகம்
multi-img1 of 2

மதுரை: மதுரை, அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைய இருப்பதாக வெளிவந்துள்ள தகவலால், அப்பகுதி மக்கள் போராட்டக் களத்தில் குதிக்கத் தயாராகி வருகின்றனர்.

நவம்பர் 7ஆம் தேதி சுரங்கங்கள், கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்தின்கீழ், மத்திய அரசின்கீழ் இயங்கும் கனிமம், சுரங்கம் அமைச்சகம் நடத்திய 4வது ஏலத்தில் ஸ்டெர்லைட் வேதாந்தா துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனம் டங்ஸ்டன் கனிமத்தை எடுக்கும் உரிமத்தைப் பெற்றுள்ளது.

இதன்படி ஆந்திரா மாநிலம் பாலே பாளையம், தமிழ்நாட்டில் மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிமம் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள் மத்திய அரசின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனவும், தெற்கு தெரு, முத்துவேல்பட்டி, மீனாட்சி புரம், நடுவளவு, தெற்கு வளவு, சண்முகநாதபுரம், அ.வல்லாளப்பட்டி, கூலானிப்பட்டி, கிடாரிப்பட்டி, எட்டி மங்கலம், செட்டியார்பட்டி, நாயக்கர்பட்டி போன்ற கிராமங்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளதால் சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு, மாநில அரசிடம் அந்த நிறுவனம் விண்ணப்பித்தால் தமிழ்நாடு அரசு தாமதமின்றி நிராகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டின் சிறந்த பல்லுயிர் வாழிடப்பகுதிகளில் ஒன்றான அரிட்டாபட்டிச் சீரழிக்கும் வகையிலான இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தங்களுடைய கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

“கீழடி அகழாய்வுக்கு அனுமதி கேட்டபோது தராத மத்திய அரசு அரிட்டாபட்டியை அழிக்க அனுமதி தருகிறது. அரிட்டாபட்டி பகுதியில் வேதாந்தா நிறுவனம் சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏலம் விட்டுள்ளது. இது தமிழகத்தின் வளங்கள், வரலாற்றை ஒருசேர அழிக்கும் முயற்சி,” என மத்திய அரசுக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம், மேலூர் தாலுகாவில் அமைந்திருக்கும் குக்கிராமம்தான் அரிட்டாபட்டி. மண் வளமும் மலை வளமும் உள்ள இந்தப் பகுதியின் முக்கிய தொழிலாக விவசாயம் இருக்கிறது. அதில் நெல் முக்கியப் பயிராக இருக்கிறது.

முற்கால பாண்டியர் வடிவமைத்த குடைவரை சிவன் கோவில், இரண்டாயிரம் ஆண்டுக்கு முந்தைய சமணர் படுகைகள் என சிறப்பு வாய்ந்த தலமாக அரிட்டாபட்டி இருக்கிறது. 
முற்கால பாண்டியர் வடிவமைத்த குடைவரை சிவன் கோவில், இரண்டாயிரம் ஆண்டுக்கு முந்தைய சமணர் படுகைகள் என சிறப்பு வாய்ந்த தலமாக அரிட்டாபட்டி இருக்கிறது.  - படம்: தமிழக ஊடகம்

கி.பி. 7-8 ஆம் நூற்றாண்டில் முற்கால பாண்டியர் வடிவமைத்த குடைவரை சிவன் கோவில், இரண்டாயிரம் ஆண்டுக்கு முந்தைய சமணர் படுகைகள் என சிறப்பு வாய்ந்த தலமாக அரிட்டாபட்டி இருக்கிறது.

இக்கிராமத்தைச் சுற்றி 7 மலைகள் அமைந்துள்ளன. இந்த மலைகளை சுற்றி வற்றாத நீரூற்றுகளும், நூற்றுக்கும் மேற்பட்ட நீர் நிலைகளும், 1,200 வகையான மீன் இனங்களும், 600 வகையான பூச்சி இனங்களும், 300க்கும் மேற்பட்ட அரிய பறவை, விலங்கினங்களும் வாழ்ந்துள்ளன. இதில் பல அரிய உயிரினங்கள் காலப்போக்கில், சமூக விரோதிகளின் பல்வேறு நடவடிக்கைகளால் அழிந்து விட்டன.

இதேபோல், ராசாளி கழுகு உட்பட அரியவகை பறவைகளும் இங்கு வசித்து வருகின்றன. இவை தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

அரிட்டாபட்டி குன்றுகளுக்கு இடையே அமைந்துள்ள குளம். 
அரிட்டாபட்டி குன்றுகளுக்கு இடையே அமைந்துள்ள குளம்.  - படம்: தமிழக ஊடகம்

தற்போது இந்தப் பகுதியில் 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்று குளங்களும் உள்ளன. மேற்கண்ட குளம், ஏரி மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

இப்பகுதியானது 2,20‌0 ஆண்டுகள் பழமையான தமிழி எழுத்து கல்வெட்டுகள், சமணர் படுகைகள், குடைவரை கோயில்கள் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் உள்ள பகுதியாக உள்ளது. இதன் காரணமாகவே இந்த இடம் பல்லுயிர் சூழல் மண்டலமாக அடையாளம் காணப்பட்டு, அறிவிக்கப்பட்டது.

2022ஆம் ஆண்டு அரிட்டாபட்டி, மீனாட்சிபுரத்தை உள்ளடக்கிய 193.215 ஹெக்டேர் பகுதியை பாரம்பரிய உயிர்ப் பன்மையம் வாய்ந்த பகுதியாக தமிழ்நாடு அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டது.

குறிப்புச் சொற்கள்