திருப்பூர்: அரசுப் பள்ளி விழாவில் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசிய மகாவிஷ்ணு நடத்தி வரும் அறக்கட்டளை அலுவலகத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
தன்னம்பிக்கைப் பேச்சாளர் என்று தம் ஆதரவாளர்களால் குறிப்பிடப்படும் மகாவிஷ்ணு, வியாழக்கிழமையன்று (செப்டம்பர் 12) தமது பரம்பொருள் அறக்கட்டளைக்கு அழைத்து வரப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதி அருகே செயல்பட்டுவரும் பரம்பொருள் அறக்கட்டளையின் தலைமை அலுவலகத்துக்கு மலேசியா, இலங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் கிளைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
திருப்பூரில் மேற்கொண்ட விசாரணையின்போது, அறக்கட்டளைக்கான நன்கொடை விவரங்கள், என்னென்ன பணிகள் நடக்கின்றன, மகாவிஷ்ணு ஆற்றியுள்ள சொற்பொழிவுகள் குறித்த விவரங்கள் ஆகியவை காவல்துறையினரால் திரட்டப்பட்டதாகத் தெரிகிறது.

