தமிழகத்தின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்

தமிழகத்தின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்

2 mins read
db421b18-1718-4de4-86a6-1339929b4677
பஞ்சாப்பைப் பூர்வீகமாகக் கொண்ட மகேஷ்குமார் அகர்வால். - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் எல்லைப் பாதுகாப்புப் படை டிஜிபியாகப் பணியாற்றி வரும் இவர், இப்போது தமிழக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோருக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மகேஷ்குமார் அகர்வால் 1994ஆம் ஆண்டு பிரிவின் ஐபிஎஸ் அதிகாரி. இவர் சட்டம் பயின்றவர். சொந்த மாநிலம் பஞ்சாப் ஆகும். தந்தையும் வழக்கறிஞர் என்பதால் சட்டம் பயின்று பின்னர் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி 22 வயதில் ஐபிஎஸ் அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.

தேனி எஸ்.பி., தூத்துக்குடி எஸ்.பி., 2001ல் சென்னை பூக்கடை துணை ஆணையர், சென்னை போக்குவரத்துக் காவல் தெற்கு துணை ஆணையர் எனப் பொறுப்பு வகித்த மகேஷ்குமார் அகர்வால், பின்னர் சொந்த மாநிலமான பஞ்சாப் மாநிலத்தில் சிபிஐ எஸ்.பி.யாக அயல் பணியில் சென்றார்.

ஏழு ஆண்டுகள் சிபிஐ அதிகாரியாகப் பஞ்சாப், ஹரியானா, ஜம்மு காஷ்மீரில் பணியாற்றினார். பின்னர் ஐஜியாகப் பதவி உயர்வுபெற்று தமிழகம் திரும்பிய மகேஷ்குமார் அகர்வால், சிபிசிஐடி ஐஜியாகப் பதவி வகித்தார். பின்னர் மதுரை காவல் ஆணையராகச் சென்றார். மீண்டும் சிபிசிஐடி ஐஜியாகப் பதவி ஏற்றார்.

பின்னர் சென்னை தெற்கு மண்டலக் கூடுதல் ஆணையராகப் பொறுப்பேற்றார். பின்னர் செயலாக்கப் பிரிவு ஏடிஜிபியாக இருந்த மகேஷ்குமார் அகர்வால், 2020ல் சென்னையின் இளம் காவல் ஆணையராகப் பொறுப்பேற்றது நினைவுகூரத்தக்கது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தபோது, சந்தீப் ராய் ரத்தோரை சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக தேர்தல் ஆணையம் நியமித்தது. அதன்பின், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட சூழலில், தமிழகத்தில் புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக டெல்லியில் மத்திய பணியாளர் தேர்வாணையம் அண்மையில் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலர் சாய்குமார், உள்துறைச் செயலர் மணிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அந்தக் கூட்டத்தில், டிஜிபிக்களான ராஜீவ்குமார் (காவல் உயர் பயிற்சியகம்), சந்தீப் ராய் ரத்தோர், மகேஷ் குமார் அகர்வால் (அயல் பணியாக எல்லைப் பாதுகாப்புப் படை- டெல்லி) ஆகிய மூவர் பட்டியலுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் ஒப்புதல் வழங்கி அவர்களின் பெயர்களைப் பரிந்துரைத்தது.

இந்தப் பட்டியல் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவர்களில், மகேஷ்குமார் அகர்வாலை சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக தமிழக அரசு முறைப்படி இப்போது அறிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
பாதுகாப்புபஞ்சாப்ஐபிஎஸ்