தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அன்பில் மகேஷ்: விருப்பத்திற்கேற்ப மொழி படிக்கலாம்; அது திணிக்கப்படக் கூடாது

3 mins read
8cbc55f2-4379-4403-b689-444b57b82c7a
பாஜகவினர் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக மாணவர்களிடம் வற்புறுத்திக் கையெழுத்து வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ் நாடு கல்வியமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: எங்கள் பிள்ளைகள் ஆசைப்பட்டால் எத்தனை மொழி வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளட்டும். ஆனால் அதைக் கற்றுக் கொண்டால்தான் உனக்கு வாய்ப்பு, பணம் தருவேன் என்று சொல்லி அச்சுறுத்துவது சரியல்ல என்று தமிழ் நாடு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

“நாம் அனைவரும் இருமொழிக்கொள்கையைப் படித்து விட்டுத் தானே இருக்கிறோம். நம்முடைய பிள்ளைகளும் அப்படிப் படிக்க வேண்டும் என்று தானே ஆசைப்படுகிறோம்.

“எதுக்கு பிள்ளைகளுக்குக் கஷ்டத்தைக் கொடுக்க வேண்டும். எங்கள் பிள்ளைகள் ஆசைப்பட்டால் எத்தனை மொழி வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளட்டும். ஆனால் அது விருப்பமாக இருக்க வேண்டுமே தவிர கட்டாயமாக இருக்கக் கூடாது என்பது எங்கள் கருத்து,” என்று அமைச்சர் அன்பில் தெரிவித்துள்ளார்.

பள்ளிக் கூடங்களின் வாசலில் நின்று பிஸ்கட் கொடுத்து மாணவர்களிடம் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாகக் கையெழுத்து வாங்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மும்மொழிக்கொள்கை விவகாரத்தில் தமிழகத்தின் மொழி குறித்த உணர்வை மத்திய அரசு புரிந்துகொள்ளவில்லை என அவர் கூறினார்.

பள்ளிக்குச் செல்லும் மாணவர்களை வலுக்கட்டாயமாக அழைத்துக் கையெழுத்து வாங்குவதாகப் புகார் வருகிறது. பா.ஜ.க. நிர்வாகிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர் என்றார்.

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக மாணவர்களைக் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்குகின்றனர். மாணவர்களைக் கட்டாயப்படுத்தி கையெழுத்து பெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

பாஜகவைப் பொறுத்தவரை எப்படியாவது முயற்சித்து ஒரு திருக்குறளை ஆவது சொல்லி விடுகிறது. அப்படி திருக்குறள் சொல்வதை பார்த்து ஒருபுறம் ரசித்துக் கொண்டிருக்கையில், மறுபுறம் நிதி எதற்கு ஒதுக்கிறார்கள் என்று பார்த்தால் சமஸ்கிருதத்திற்கு தான் 1,488 கோடி ரூபாய் அளவிற்கு ஒதுக்கி விடுகிறார்கள் என்று அமைச்சர் அன்பில் தெரிவித்துள்ளார். திமுக அரசு நிலைப்பாடு

நம்முடைய திராவிட மொழிகள் அனைத்திற்கும் மிகவும் குறைவான நிதியைத் தான் ஒதுக்குகிறார்கள். இதைத் தான் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ச்சியாக கூறி வருகிறார். எங்களைப் பொறுத்தவரை முதலமைச்சர் சொல்வதுபோலச் சொல்கிறோம்.

நாங்கள் பிடிவாதம் பிடிக்கவில்லை. தெளிவாக இருக்கிறோம். எங்களுக்கு இரு மொழிகள் மட்டுமே போதுமானதாக உள்ளது. அதை வைத்தே பல்வேறு சாதனைகளை எங்களுடைய பிள்ளைகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

எல்லா விதத்திலும் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழும் போது, ஒன்றிய அரசு மட்டும் மொழியைத் திணித்து அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றம் அடையாத வகையில் என்னென்னவெல்லாம் செய்யலாம் என்று யோசித்து செயல்பட்டு வருகிறார்கள். தமிழர்களை பொறுத்தவரை உணர்வுப்பூர்வமாக உயிராக இருப்பது மொழி தான்.

மொழி தான் முக்கியம்

தமிழ் மொழியில் கைவைக்க வேண்டும் என்ற வேலையைத் தான் மறைமுகமாக செய்து வருகிறார்கள். அதற்கு எந்த வகையிலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளிக்க மாட்டார். இந்த 2,000 கோடி ரூபாய்க்கு தற்போது நான் ஒத்துக் கொண்டால் என்னுடைய தமிழினத்தை 2,000 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்வதற்கு சமம்.

அந்த பாவச் செயலைச் செய்ய மாட்டேன். 10,000 கோடி ரூபாய் கொடுத்தாலும் செய்ய மாட்டேன். கொள்கையை விட்டு நிதியைப் பெற வேண்டிய அவசியம் இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெளிவுபடுத்தியுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்