6,000 உதவிப் பேராசிரியர்கள் நியமனம்

6,000 உதவிப் பேராசிரியர்கள் நியமனம்

2 mins read
1aff80cd-f07b-465c-ac32-e7e210e90272
பத்து அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகள் ரூ. 20 கோடி செலவில் தன்னாட்சிக் கல்லூரிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளதாகவும் அமைச்சர் விஸ்வநாதன் குறிப்பிட்டார். - கோப்புப் படம்: நியூஸ் 18
Google News Preferred Icon

சென்னை: அரசுக் கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில், அரசுக் கலை, அறிவியல், பொறியியல், பலதுறைத் தொழிற்கல்லூரிகளில் மொத்தம் 6,000 உதவிப் பேராசிரியர்கள் மூன்று கட்டங்களாக நியமிக்கப்பட உள்ளனர்.

அதற்கான அறிவிப்பை உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் சட்டமன்றத்தில் வெளியிட்டார்.

தமிழக அரசுக் கல்லூரிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் உயர்கல்வியின் தரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்த கௌரவ விரிவுரையாளர்களின் மாதாந்தரத் தொகுப்பூதியமும் உயர்த்தப்பட்டுள்ளது. கலை, அறிவியல், பொறியியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களின் ஊதியம் ரூ.30,000ல் இருந்து ரூ. 35,000 ஆகவும் பலதுறைத் தொழிற்கல்லூரி விரிவுரையாளர்களின் ஊதியம் ரூ.25,000ல் இருந்து ரூ. 30,000 ஆகவும் உயர்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம்

அரசு உயர்கல்வி நிறுவனங்களின் கல்விசார் உள்கட்டமைப்பை வலுப்படுத்த ‘காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம்’ நடப்பாண்டு முதல் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு செயல்படுத்தப்படும் என்றும் இத்திட்டத்திற்காக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், பத்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் ரூ.20 கோடி செலவில் தன்னாட்சிக் கல்லூரிகளாகத் தரம் உயர்த்தப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மாணவர்களின் உயர்கல்விக் கனவை நனவாக்க, ரூ.20 லட்சம் வரை பிணையற்ற கல்விக்கடன் வழங்கும் ‘கல்வி உத்தரவாதத் திட்டம்’ அறிமுகப்படுத்தப்படுகிறது. அதனுடன், அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து அரசுக் கல்லூரிகளில் சேரும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பொருளியலில் பின்தங்கிய முதல் தலைமுறை மாணவர்களுக்கு முழுமையான கட்டண விலக்கு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
உயர் கல்விஅறிவியல்பொறியியல்கல்லூரிபேராசிரியர்