சென்னை: கள்ளநோட்டு தொடர்பாக மலேசியாவைச் சேர்ந்த சேர்ந்த புவனேஸ்வரி என்ற மாதை தமிழ்நாடு காவல்துறை வியாழக்கிழமை (ஜூலை 16) கைதுசெய்துள்ளது.
மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்து கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விடும் கும்பல் தலைவியாகச் செயல்பட்டபோதுதான் புவனேஸ்வரி காவல்துறையிடம் சிக்கி உள்ளார்.
முதல்கட்ட விசாரணையில் புவனேஸ்வரி கடந்த ஒரு மாதமாக ரூ.1 கோடி மதிப்புள்ள 500 ரூபாய் கள்ளநோட்டுகளைக் கடத்தி வந்து புழக்கத்தில் விட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கள்ளநோட்டுக் கும்பலுடன் சேர்ந்து பரிமளா என்ற பெண்ணும் செயல்பட்டு வந்து இருப்பது தெரிய வந்துள்ளது. இவரும் புவனேஸ்வரியுடன் தி.நகர் விடுதியில் தங்கி இருந்து உள்ளார். மலேசியா திரும்பிய பரிமளாவைப் பிடிப்பதற்கும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இவர்கள் மூலமாக தஞ்சாவூா் வெட்டிக்காடு பகுதியைச் சோ்ந்த ரவிச்சந்திரன், 40 என்பவருக்குக் கள்ள நோட்டுகள் கிடைத்துள்ளன. கைது செய்யப்பட்ட அவரது வீட்டிலிருந்து ரூ.22.79 லட்சம் ரொக்கம், 4 கடவுச்சீட்டுகள், ரூ.9 ஆயிரம் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ரவிச்சந்திரன் சில ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவில் பணியாற்றியபோது, அங்கு கள்ளநோட்டுக் கும்பலுடன் இணைந்து கள்ளநோட்டுகளை இந்தியாவுக்குக் கடத்தி விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.
சபீக் ரஹ்மான் என்பவருடன் இணைந்து கள்ளநோட்டு விநியோகத்திற்கான கட்டமைப்பை அவர் உருவாக்கியுள்ளார். டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரான 37 வயது சபீக் ரஹ்மானும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ரூ.11 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கள்ளநோட்டுகளை மலேசியாவில் அச்சடித்து பல்வேறு வழிகளில் அவர்கள் தமிழகத்திற்கு கடத்தி வந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கைதானவர்கள் நடத்திய சோதனையில் கடப்பிதழ்களும் இருந்தன. அவர்கள் பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்துள்ளதாகவும் அறியப்படுகிறது.
அதன்மூலம் இந்தக் கும்பலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாமோ என்ற சந்தேகமும் ஏற்பட்டு உள்ளது. அதன் பின்னணி பற்றியும் மத்திய, மாநில காவல்துறை விசாரணை நடத்துகிறது.

