சென்னை: மல்லை சத்யா மதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சிப் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
முன்னதாக அவரை தற்காலிகமாகக் கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக மதிமுக தலைமை அறிவித்திருந்தது.
இதுதொடர்பாக வெளியிட்ட ஓர் அறிக்கையில், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு மல்லை சத்யாவுக்கு கடிதம் அனுப்பி இருந்த நிலையில், அதில் இடம்பெற்றுள்ள குற்றச்சாட்டுகளை அவர் மறுக்கவும் இல்லை, விளக்கம் அளிக்கவில்லை என வைகோ குறிப்பிட்டுள்ளார்.
“எனவே, மதிமுகவின் கொள்கை, குறிக்கோள், நன்மதிப்பு, ஒற்றுமைக்குக் கேடு விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ளார். மேலும், மல்லை சத்யா மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன. கட்சிக்கு விரோதமாக நடந்துகொண்டதன் அடிப்படையில் நடவடிக்கைகள் பலவற்றில் ஈடுபட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளன.
“எனவே, கட்சியின் சட்ட விதிகளின்படி, துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட கழகத்தின் அடிப்படை உறுப்பினர் ஆகிய பொறுப்புகளில் இருந்து மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கப்படுகிறார்,” என வைகோ தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.