சென்னை: மதிமுக துணை பொதுச் செயலாளர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மல்லை சத்யாவை தற்காலிகமாக நீக்குவதாக அந்த கட்சியின் தலைவர் வைகோ அறிவித்துள்ளார்.
மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கும் மல்லை சத்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வந்த நிலையில், மல்லை சத்யா அதிருப்தியில் இருந்தார்.
இந்த நிலையில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததைப்போல், மல்லை சத்யா தமக்குத் துரோகம் செய்துவிட்டதாக வைகோ அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளித்த மல்லை சத்யா, தன்னை துரோகி எனக் கூறியதற்குப் பதிலாக விஷம் கொடுத்திருந்தால் குடித்துவிட்டு இறந்திருப்பேன் எனத் தெரிவித்தார்.
இதனிடையே, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காக மல்லை சத்யா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக வைகோ தெரிவித்துள்ளார்.
மேலும், கட்சியின் துணை பொதுச் செயலாளர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மல்லை சத்யாவை தற்காலிகமாக நீக்குவதாகவும் 15 நாள்களுக்குள் எழுத்துபூர்வமாக தன்னிடம் பதிலளிக்கவும் வைகோ தெரிவித்துள்ளார்.